இலங்கைக்கு சென்றுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைன் உயரதிகாரிகள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை ஆரம்பகட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்குதற்கான செயற்திட்டம் குறித்தும் அவற்றின் இதுவரையான முன்னேற்றங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஐநா அதிகாரிகளுக்கு விபரித்ததாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறிய அவர், வடபகுதியின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதிலும் ஐநா அதிகாரிகள் ஆர்வம் காட்டியதாகவும் கூறினார்.
இலங்கை சென்றுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வட அமெரிக்க துறைசார் பொறுப்பாளர் ஹன்னி மெகாலி அவருடன் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத் தெரிவுகளுக்கான மனித உரிமைகள் அதிகாரி ஒஸ்கார் சொலேரா ஆகிய இருவரும் வடபகுதிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.