இலங்கை பிரதான செய்திகள்

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்குத் தாக்கல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு எதிராக சட்டத்தரணியொருவர் உயர் நீதிமன்றத்தில நேற்றைய தினம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக, தீர்வை வரி இன்றி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக, ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தபோதிலும், அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய, ஆணைக்குழுவிற்கு எதிராக இத்தகைய மனுவொன்றை தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் தாம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது, ஆணைக்குழு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ள சட்டத்தரணி நாகஹனந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

தீர்வை வரி இன்றி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் வேறு தரப்பினருக்கு விற்கப்படுவதால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாகவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ள  அவரது  மனுவில் சட்ட மாஅதிபர், பிரதமர், 83 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 93 பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய வேறு தரப்பினரிடம் வாகனங்களை விற்பனை செய்த 27 பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரி இன்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தவணை கொடுப்பனவு அடிப்படையில் சொகுசு கார்களை வழங்குவதற்கான பிரேரணையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதெனவும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாத்திரமே இந்த வாகனத்தை ஏற்க மறுத்துள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுள்ள மனுவை கவனத்திற்கொள்ளும் போது வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெற்று அதனை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த சொகுசு வாகனங்களை பெறுவதற்காக பெயரிடப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *