இலங்கை பிரதான செய்திகள்

இயலாமைக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 பேர் பயனடைந்தனர்.

இயலாமையுடன் கூடிய ஆட்களை அடையாளப்படுத்துவதற்கான வடமாகாண சபையின் மருத்துவ சான்றிதழ் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 400 பேர் நன்மையடைந்துள்ளனர்.

வடமாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களம் வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஏழு மருத்துவ முகாம்கள் இதற்காக நடத்தப்பட்டதாக வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு மருத்துவ முகாம்களும், வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரவில் ஐந்து மருத்துவ முகாம்களும் வவுனியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவகத்தைச் சேர்ந்த டாக்டர் லவன் மற்றும் டாக்டர் மதிதரன் ஆகியோரும், வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த டாக்டர் செந்தூர்பதிராஜா ஆகியோர் தமது மருத்துவ தாதிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய அணியினருடன் இணைந்து இந்த மருத்துவ முகாம்களில் பங்கேற்றிருந்தனர்.

இந்த மருத்துவ முகாம்களை செயற்படுத்துவதற்கு ஐ.டபிள்யு.பி.ஆர் என்ற யுத்தம் மற்றும் சமாதானத்திற்கான அறிக்கையிடல் நிறுவனம் நலிவுற்றோரின் சட்டரீதியான அடையாளப்படுத்தல் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *