இலங்கை பிரதான செய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பு கோரி ஒன்றுதிரண்ட முன்னாள் போராளிகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இன்று த ிங்கள் காலை கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு முன்னாள் ஒன்றுதிரண்டு தர்க்கத்திலும் ஈடுப்பட்டனா்.

காலை பத்து முப்பது மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் முன்னாள்  போராளிகள் தாங்கள் புனா்வாழ்வுப்  பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனா்வாழ்வு  பெற்றக்  காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரிநின்றனா்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும் அதனடிப்டையில் இன்று (02) தேசிய அடையாள அட்டை மற்றும் புனா் வாழ்வு  பெற்று விடுதலையான கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு தகவல் வெளிவந்ததாகவும்  அதற்காகவே இங்கு வந்திருகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.    எனவே  எங்களுக்கு வேலைவாய்ப்பை தாருங்கள் என சிவில் பாதுகாப்புத் திணைக்கள  கிளிநொச்சி கட்டளை அதிகாரி  மேஜர்  சாகர வீரசிங்கவிடம் கோரிநின்றனா்.

ஆரம்பத்தில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் வேலைவாய்ப்புக்கு ஆட்கள்  உள்வாங்கப்பட்ட போது பெரும்பாலான முன்னாள் போராளிகள் தடுப்பில் இருந்து வெளிவரவில்லை. வெளிவந்தவா்களில் பலா் அப்போது இணைந்துகொள்வதில் விருப்பம் தெரிவிக்கவில்லை. காரணம்  புதிதாக படையினருக்கு ஆட்கள் சேர்க்கின்றாா்கள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.  ஆனால் இப்போது  மாதாந்தம் முப்பதாயிரம் ரூபாவுக்கு மேலதிகமான சம்பளத்துடன் பண்ணைகளில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றமையை இப்போது நாங்கள் பாா்க்கின்றோம்.

இதன் மூலம் அந்தக் குடும்பங்கள் நிம்மதியாக  வாழ்கின்றனா். எனவே  அ்வவாறானதொரு நிம்மதியான வாழ்க்கையை  ஏனைய முன்னாள் போராளிகளும் பெற்றுக்கொள்ள எங்களுக்கும்  சிவில் போதுகாப்புத் திணைக்களத்தில் வேலை தாருங்கள் எனத் தெரிவித்தனா்.

மேலும்  வெளியில் நாங்கள் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கோரினால் முன்னாள் போராளிகளுக்குதானே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலை இருக்கிறது  எனறார்கள். ஆனால் இங்கு முன்னாள் போராளிகளான எங்ளுக்கு வேலைவாய்ப்பு தர மறுகினறீா்கள்.  எனவும் முன்னாள்  போராளிகள் குறிப்பிட்டனா்.

இது தொடா்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள  கிளிநொச்சி கட்டளை அதிகாரி  மேஜர்  சாகர வீரசிங்க கருத்து தெரிவித்த போது

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான முன்னாள்  போராளிகள்  ஒன்று கூடியுள்ளனா். சிவில்  பொதுகாப்பு திணைக்களத்தை  பொறுத்தவரை தற்போதைக்கு   புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும்  நிலையில் இல்லை. இந்த முன்னாள் போராளிகளை பாா்க்கின்ற  போது கவலையாக இருக்கிறன்றது. இந்த விடயத்தில் எங்களால் எதுவும்  செய்ய முடியாது எனவும்  கொழும்பு மட்ட உயரதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற விடயம் எனவும்  குறிப்பிட்டாா்.

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய முன்னாள் போராளிகள் இரணைமடுச் சந்தியில்  சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு  கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றிலும் ஈடுபட்டனா்.

இதன் போது சில பெண் முன்னாள் போராளிகள் குழந்தைகளுடன்  வேலைவாய்ப்பு கோரி காத்திருந்து பரிதாபமான சம்பவங்களும் இடம்பெற்றது.

இதேவேளை 170 போ் கையொப்பம் இட்டு  வேலைவாய்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை  கிளிநொச்சி அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ளனா்.

அத்தோடு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜரை பாராளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதனிடம் கையளிக்கவும் தீர்மானித்துள்ளனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *