இலங்கை பிரதான செய்திகள்

மைத்திரியின் ஆட்சியில் தீர்க்கப்படாவிட்டால் எக்காலத்திலும் இனப்பிரச்னையை தீர்க்கமுடியாது

இனப்பிரச்னைக்கான  தீர்வு இந்த ஜனாதிபதியின் ஆட்சிகாலத்துக்குள்  சாத்தியப்படாவிட்டால் இனி எந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலும் சாத்தியப்படாது என கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று  இரண்டு வருடப் பூர்த்தியை  முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  கிழக்கு மாகாண முதலமைச்சர்  இதனைக் கூறினார்,

சிறுபான்மையினரின்  அபிலாஷைகளை  நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையிலேயே   முஸ்லிம் தமிழ் மக்கள் நல்லாட்சியை இந்த  நாட்டில் உருவாக்கியுள்ளார்கள், அதன் அடிப்டையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அவர்கள் கிழக்கு மற்றும் வடக்கின்  அபிவருத்தி  குறித்து கரிசனை செலுத்தி பல வேலைத்திட்டங்களை  நடைமுறைப்படுத்தி வருவது  வரவேற்கத்தக்கது.

சிறுபான்மை   மக்கள் இந்த மண்ணில் நிரந்தரமாக நிம்மதியாக வாழ்வதற்கான  தீர்வொன்றையும் ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன  வழங்குவார் என்ற  நம்பிக்கை  இன்னும் எமக்கு இருக்கின்றது என்பதை கூறியாகவேண்டும் எனத் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி  அதிகாரப்  பகிர்வின்  மூலம்  மாத்திரமே  இனப்பிரச்சினைக்கான  தீர்வு  முழுமைப் பெறும் என்பதை  மறுக்க முடியாது என்பதுடன்  அதிகாரப்  பகிர்வை   அரசியல்  தீர்வினூடாக வழங்கி  யுத்த்த்தால் அதிகம் பாதிக்கப்பட்டு இன்னும்  பல்வேறு இன்னல்களை  எதிர்நோக்கி வரும் மக்களின் வாழ்வை  துரிதமாக கட்டியெழுப்ப  ஜனாதிபதி  தமது பங்களிப்பை  வழங்குவார் என்று  நாம்  முழுமையாக நம்புகின்றோம்.

அத்துடன்  இனவாதம்  இந்த  நாட்டில்  மீண்டும் தலைதூக்கி தலைவிரித்தாட  ஆரம்பித்துள்ளது  இதன்  மூலம்  சிறுபான்மை  மக்கள்  அரசின் மீது  அதிருப்தியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பதுடன் கௌரவ ஜனாதிபதியவர்கள்  இதனைக் கருத்திற் கொண்டு  இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காது சிறுபான்மை மக்களின்  பாதுகாப்பையும் அவர்கள் நிம்மதியாக வாழ்வ்வதற்கான சூழலையும் ஏற்படுத்தவேண்டும்  என கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில்  தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை  மற்றும்  வறுமை  ஆகியவற்றுக்கும்  ஜனாதிபதி கால்பதித்திருக்கும் தமது  மூன்றாவது  ஆட்சிக்காலத்தில் தீர்வு வழங்க்ப்படும் என நம்புவதாகவும்  கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர்  அஹமட் குறிப்பிட்டார்,

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *