இந்தியா பிரதான செய்திகள்

வாடிப்பட்டியில் அடைத்துவைக்கப்பட்டவர்கள் விடுதலையாக மறுப்பு – மெரீனாவில் மின்சாரம் துண்டிப்பு – கைத்தொலைபேசி வெளிச்சத்துடன் போராட்டம் தொடர்கின்றது

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டோரை விடுவிக்ககோரி மாணவர்கள், சென்னை, மெரினா கடற்கரைப்பகுதியில் காலை முதல் போராடி வருகின்றனர். சமூக வலைதளங்களின் மூலம் ஒருங்கிணைந்த இவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனினும்  மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள், மாணவர்கள் தங்களது கைத்தொலைபேசி  மூலம்  வெளிச்சத்தைப் பெற்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்திய போதும்  அதனை ஏற்க போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறதெனவும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வாடிப்பட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலையாக மறுத்துள்ளனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 97பேர்  விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு வழியில் போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் மீதமுள்ள 127 பேர் விடுதலையாக மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும் வரை மண்டபத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை கோவை, வேலூர், கடலூர். மாநிலம் முழுக்க இளைஞர் போராட்டம் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *