இலங்கை பிரதான செய்திகள்

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணி மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இன்றையதினம்  முல்லைத்தீவு கேப்பாப்பிளவு பகுதியில்  இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணி, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன   மேலும் முந்நூறு பேருக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் க சிவநேசன், ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், காவல்துறை அதிபர் பூஜித் ஜயசுந்தர, முல்லைத்தீவு இராணுவ கட்டளை தளபதி, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டட தொகுதியை திறந்து வைப்பதற்காக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு, இன்று  வருவார் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *