இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண மக்களுக்கு அறிவுக் கூர்மையுடன் வித்துவ செருக்கும் உண்டு. – சி.வி:-

வடமாகாண மக்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள். ஆனால் அதனுடன் சேர்ந்து வித்துவச் செருக்கும் அவர்களிடம் குடிகொண்டிருக்கின்றது. தான் சொல்வது மட்டுந்தான் சரி என்று அடித்துக் கூற முற்படுகிறார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ர்ளூர் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கு யாழ் பொது நூலகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. நதிகள் அற்ற ஆனால் நற்குளங்களையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீரியல் கொள்கை எமக்கு அவசியமாகின்றது.

கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கையானது எமக்கு ஏற்புடையதாகும் என்று கூறமுடியாது. அதனால்த்தான் எமது அறிவுசால் உள்ளுர், சர்வதேச நிபுணத்துவப் பெருமக்களை அழைத்து எமக்கென நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க முற்பட்டுள்ளோம்.

முதலில் கொள்கை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம். கலந்துரையாடலின் பின்னர் ஏதேனும் ஒரு துறை பற்றி அரசியல் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களே கொள்கைக்கு அஸ்திவாரமாகின்றன.

ஒரு குறிப்பிட்ட துறையில் எதனை, ஏன், எவ்வாறு செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதே மேற்படி தீர்மானங்கள். மேலெழுந்தவாரியாக நாட்டுக்கென ஒரு பொருளாதாரக் கொள்கையை வகுக்கலாம். அதே நேரத்தில் நாட்டின் ஒவ்வொரு துறை சம்பந்தமாகவும் வகுக்கலாம். அதே போன்று மாகாண ரீதியாகவும் வகுக்கலாம்.

எவ்வாறு ஒரு துறை சம்பந்தமாக அபிவிருத்தி நடைபெறவேண்டும், சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற அனைத்தினதும் வடிவமைப்பு கொள்கையினுள் அடங்கும். மத்திய அல்லது மாகாண அரசாங்கம் கொள்கையை வகுத்த பின் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அந்தந்த அரச, மாகாண திணைக்களங்களுக்குண்டு.

ஆனால் சில நேரங்களில் கொள்கைக்கும் சட்டத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படலாம். ஆகவே நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சில தடவைகளில் சட்டத்தை மாற்ற வேண்டியிருக்கும். சில வேளைகளில் கொள்கையை மாற்ற வேண்டிவரும்.

ஒரு நாட்டின் அல்லது மாகாணத்தின் அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நோக்குகளின் பிரதிபலிப்பாகவே கொள்கை இருக்கும். எனவே கொள்கைகளாவன சமூக, அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப நாளடைவில் மாற்றமடையக் கூடியன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஆழக் கிண்டும் கிணறுகள் முன்னர் இருக்கவில்லை. ஆகவே அவை பற்றி அப்போது கொள்கைகள் வகுக்கப்படவில்லை. தற்போது அவற்றை வகுப்பது அவசியமாகியுள்ளது. 65000 பொருத்து வீடுகள் அந்தளவு ஃபோர்க் குழாய்க் கிணறுகளுடன் கட்டப்படுவன என்றே அறிவிக்கப்பட்டது. அவற்றின் தாக்கங்கள் பாரதூரமானவை என்பதை நாம் அறிவோம்.

ஆனால் கொழும்பு அறிந்திருக்க அவசியமில்லை. ஆழக்கிண்டும் போர்க் குழாய்க் கிணறுகளுக்கும் எமது வழமையான கிணறுகளுக்கும் வேற்றுமைகள் பல உண்டு. ஃபோர்க் கிணறுகள் ஆழ்நீரை அள்ளிவந்து ஆபத்தான பின்விளைவுகளை விளைவிக்கக் கூடியன. இவை எல்லாம் எமது கொள்கை வகுப்பின் போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இதுகாறும் நடைமுறையில் இருந்து வந்த கொள்கைகள் தேவையெனில் மாற்றப்பட வேண்டும்.

ஆகவே தேவைகளுக்கேற்ற மாற்றத்தை உள்ளடக்காத கடுமையான கொள்கைகளும் கூற்றுக்களும், சதா மாற்றப்பட்டு வரும் கொள்கைகளும் பயனற்றவை என்றே கூற வேண்டும். கொள்கைகள் நெகிழத்தக்கதாகவும் இருக்கவேண்டும். திட்டமிடுதலுக்கும் அபிவிருத்திக்கும் உறுதியான அடிப்படையாகவும் அமைய வேண்டும்.

தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்த அரசியல் விருப்பும் அவாவும் இருக்க வேண்டும். நடைமுறைப்படுத்த நிதி அவசியம். பொதுமக்கள் நிதியே இதற்காகப் பாவிக்கப்படப் போகின்றது. வங்கிக் கடன்களும் பொதுமக்கள் நிதியே. அவற்றை அவர்களே திருப்பி அடைக்கப் போகின்றார்கள்.

எனவே அரசியல் ரீதியான ஒப்புதல் மிக அவசியமாக அமைகின்றது. சில தருணங்களில் நீரியல் முகாமைத்துவக் கொள்கைகள் நல்லதாக அமைவன. ஆனால் அவை ஜனரஞ்சகம் பெறாதனவாக இருக்கக்கூடும். அப்போது அரசியல் ரீதியான தீர்மானங்களை மக்களின் அரசியல் பிரதிநிதிகளே எடுக்க வேண்டிவரும்.

ஆகவே அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பது இன்றியமையாதது. அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு அமைவாக கொள்கைகள் இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்த அரசியல்வாதிகளுக்கு இலகுவாக இருக்கும்.

எனவே 2013ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங் கூட உங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டும்.

கொள்கைகள் மக்கள் நலம் சார்ந்ததாக அமைய வேண்டும். தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அடுத்த தேர்தலை மையமாக வைத்து வகுக்கப்படக் கூடாது. எனவே வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் யாவரையும் உள்ளடக்கிய நோக்கு ஆகியன கொள்கைத் திட்ட வகுப்பின் போது உள்ளேற்கப்பட வேண்டும்.

அதாவது முற்றான விவாதங்கள் நடைபெற்று வெவ்வேறு தேர்வுகள் அலசி ஆராயப்பட்டே கொள்கைகள் இயற்றப்பட வேண்டும்.
எங்கள் வடமாகாண மக்களுந்தான், அறிவுடையோருந்தான் பொதுவாகவே அறிவுக்கூர்மை உடையவர்கள். ஆனால் அதனுடன் சேர்ந்து வித்துவச் செருக்கும் அவர்களிடம் குடிகொண்டிருக்கின்றது. ஆகவே தான் சொல்வது மட்டுந்தான் சரி என்று அடித்துக் கூற முற்படுவார்கள். இதனால் கொள்கைகள் வகுப்பதில் சிரமங்களும் தாமதங்களும் ஏற்படக்கூடும்.

எமது அறிவுசால் பெருமக்கள் எங்கள் பொது மக்களைப் பற்றியும் அவர்களின் நல உரித்துக்களைப் பற்றியும் மட்டும் சிந்திக்க முனைவார்களேயானால் நாம் மிக நல்ல கொள்கைகளை வகுப்போம் என்பதில் எந்தவித சந்தேகமும் எழத் தேவையில்லை.

எம்மிடம் மிகச் சிறந்த அறிவுகூர்மையும் இருக்கின்றது அத்துடன் ஆணவமும் குடிகொண்டிருக்கின்றது. சில நேரங்களில் எங்கள் ஆணவந்தான் எமது அறிவுக்கு கூர்ப்பினை வழங்குகின்றது. எனினும் எங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி கருத்தாட முன்வந்தோமானால் தெளிவான கொள்கை வரைபொன்றை ஆக்குவதில் எமக்குச் சிரமம் இருக்கத் தேவையில்லை. தெளிவான இலக்குகள், காலவரையறைகள், வெளிப்பாடுகள், சகல பங்குபற்றாளர்களுடனும் தொடர்பாடல் போன்றவற்றை உள்ளடக்கியே கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட வேண்டும்.

இவை சம்பந்தமாக உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் உரிய வழிகாட்டு ஆவணங்களைத் தயாரித்துள்ளன.
கொள்கைகள் வகுப்பானது திடீரென்று அவசரப்பட்டு யாக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. நிபுணர்களின் வழிகாட்டலின் கீழ் மக்களுடன், மக்கள் பிரதிநிதிகளுடன் அவை பற்றிப் போதியவாறு பேசி, கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வெறும் தொழில் ரீதியான மொழியில் கொள்கைகள் வகுக்கப்படாதென்றும் மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் அவை அமைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவற்றை மக்களுக்கு எடுத்தியம்பும் விதத்தில் ஆவணத்தில் அழகும் வனப்பும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நீண்டிருக்காது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாய் அமைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொள்கை ஆவணம் ஒன்று எவ்வாறு வரையப்படவேண்டும் என்பது பற்றியெல்லாம் கூறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு செயல்சார்ந்த சுருக்க உரையொன்று முகவுரையின் பின்னர் அமையவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவற்றை கொள்கை ஆவணம் தயாரிக்கப் போகும் நீங்கள் யாவரும் அறிந்து வைத்திருப்பது பயனளிக்கும்.

இந்த மூன்று நாட்களும் தொழிற்திறனுடன் நீங்கள் வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல் பற்றியும், பாதுகாத்தல் பற்றியும், பங்கிடுவது பற்றியும் முகாமைத்துவம் செய்தல் பற்றியும் ஆராய்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதற்கு அப்பால் கொள்கைகள் என்றால் என்ன, கொள்கை ஆவணம் தயாரிக்கப்படும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பன பற்றியே நான் இதுவரை கூறியிருந்தேன்.

உங்கள் பரிசீலைனையானது எமது பொருளாதாரம், கலாசாரம், மதஅனுட்டானங்கள், போரின் பின்னரான சூழல் அனைத்தையும் மனதில் எடுத்து அதில் நீரின் பங்கு என்ன என்பதை ஆராய்வதாய் அமைய வேண்டும் என்று எண்ணுகின்றேன். எமது நீர்வளத்தினை ஆராய்ந்து அவற்றின் சிறப்பியல்புகளை, குறைபாடுகளை கணக்கில் எடுக்க வேண்டும். எமது உணவுத் தேவைகளையும் அதில் நீரின் பங்கையும் ஆராய வேண்டும். தற்பொழுது நடைமுறையில் இருக்கும் நீர்சம்பந்தமான சட்டங்களை ஆராய வேண்டும்.

பல சர்வதேச உடன்படிக்கைகள் 1991ல் கொப்பென்ஹேகனில் யாக்கப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை ஆராயப்படவேண்டும்.

அவற்றில் பலவிதமான கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. நன்நீரின் தொகை அளவு வரைவெல்லைக்குட்பட்டது என்றும் பாதிக்கப்படக்கூடிய ஒரு வளம் என்றும் அது உயிரினங்களின் வாழ்வின் உயிர் நாடி என்றும் அபிவிருத்திக்கும் சூழலுக்கும் அது அத்தியாவசியம் என்றும் கூறப்பட்டுள்ளன. அதாவது நீரானது குறிப்பிட்ட அளவே பாவனைக்குண்டு. அது எந்தளவு என்றுகூட எம்மால் கணிக்க முடியும். அதைவைத்தே எமது பாவனைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

நீர்முகாமைத்துவமானது நிலப்பயன்பாட்டையும் நீர்ப்பயன்பாட்டையும் இணைத்துச் செயற்பட வேண்டும். நீரின் தரம், தன்மை பற்றியெல்லாம் ஆராய்ந்து முடிவெடுக்கப்பட வேண்டும். சுண்ணாகம் நீர் மாசுபடுதல் போன்றவை ஆராயப்பட்டு கழிவுப் பொருட்களின் வெளியேற்றல் பற்றியெல்லாம் இறுக்கமான தீர்மானங்களை நாங்கள் எடுக்க வேண்டும். இனியும் எமது நிலமும் நீரும் மாசுபடாதவாறு பாதுகாக்க வழிமுறைகளை நாங்கள் வகுத்தக் கொள்ள வேண்டும்.

நீருடன் தொடர்புடையதே சூழல். சூழலைச் சுத்தமாக வைத்திருத்தல் என்றாலேயே நீரை நன்நீராகப் பாதுகாத்து வைத்தல் என்று அர்த்தம் எனலாம். நீரைப் பாதுகாத்தல், சுத்தமாக வைத்திருத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் போன்ற அனைத்தும் உங்கள் பார்வைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நீரானது வறிய மக்களுக்கும் கிடைக்கும் விதத்தில் முகாமைத்துவப்படுத்த வேண்டும். நன்நீருக்கு ஒரு விலை வைப்பதானால் அது யாவருடனும் பேசி முடிவெடுக்கப்பட வேண்டும்.

நீர் முகாமைத்துவம் சம்பந்தமான கொள்கைகள் மற்றைய துறைகளின் கொள்கைகளுக்கு முரணானதாக அமைதல் ஆகாது. எனவே காலத்திற்குக் காலம் சகல துறைகளினதும் கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

கொள்கை வகுத்தலானது புரிந்துணர்ந்து செய்யப்பட வேண்டியதொன்று. பலவிதமான முரண்பட்ட கருத்துக்களையும் மனதில் எடுத்து அவற்றைக் கடந்து தீர்மானங்களை எடுக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள் எளிதாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும். நீங்கள் யாவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் எம் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தைக் கொடுக்க உதவுவதாக! இதில் பங்கெடுக்கும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதல்களைத் தெரிவித்து உங்கள் ஆய்வு எமது மக்களை உய்யவைக்க வல்லது என மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *