இலங்கை பிரதான செய்திகள்

கிழக்கில் ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பம்:-

 ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்  ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேரணியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் ரேவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கு இணைப்பு, இராணுவத்தினர் வெளியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கோஷங்களை எழுப்பியவாறு பேரணி இடம்பெற்று வருகின்றது. பேரணி விபுலானந்தா விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தவுடன், நண்பகல் 12 மணியளவில் எழுக தமிழ் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

எழுச்சியுடன் ஆரம்பமாவுள்ள கிழக்கு எழுக தமிழ் பேரணி

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இணைந்த வடகிழக்கே தீர்வு என்பதையும், சமஷ்டியின் மூலமே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதையும் வலியுறுத்தி கிழக்கு எழுக தமிழ் பேரணி எழுச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது.

மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பலர் பேருந்துகளில் சென்றவண்ணமுள்ள நிலையில், பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்போது மணிக்கூட்டு கோபுரத்தின் அருகிலிருந்து பேரணியாக மக்கள், விபுலானந்தா விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளனர். அங்கு, வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், இணைத்தலைவர் ரி. வசந்தராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உரையாற்றவுள்ளதாக

தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *