இலங்கை பிரதான செய்திகள்

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் நாட்களையும், வாரங்களையும் பிரகடனப்படுத்தி அவற்றை அனுஸ்டித்து வருவதால் மாத்திரம் இந்த நாட்டில் தேசிய ஒருமைப்பாடோ அல்லது தேசிய நல்லிணக்கமோ எமது மக்களிடையே உணர்வுப்பூர்வமாக ஏற்பட்டுவிடப் போவதில்லை என  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதற்கு உரிய துறைகளை இனங்கண்டு அந்தத் துறைகளை ஏற்ற வகையில் ஒழுங்கமைப்புச் செய்ய வேண்டியுள்ளது எனவும்  அந்த வகையில், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கூறியிருந்ததைப் போல் தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அறநெறிக் கல்வி ஒரு சிறந்த ஆரம்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது நாட்டில் அறநெறிக் கல்வியை ஊக்குவித்து வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டுமெனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்து சமய அறநெறிப் பாடசாலைகள் மற்றும் இஸ்லாமிய மத்ரஸாக்கள் போன்றவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை பரவலாக மேம்படுத்தி, பௌதீக வளங்கள் வழங்கப்பட்டு, அவற்றில் போதிக்கின்ற பணியை மேற்கொள்வோருக்கு போதுமான மாத ஊதியத்தை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று எமது பாசாலை பாடநூல்களிலும் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. இது தொடர்பில் நாங்கள் தற்போது அந்தந்த துறைகள் சார்ந்த தமிழ் பேராசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம் எனவும் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *