இலங்கை பிரதான செய்திகள்

சிங்களவர்களின் முதல் தலைவரை பிரித்தானியாவின் சிறையிலிருந்து மீட்டுக் கொடுத்தவர்கள் ஈழத் தமிழர்களே! தீபச்செல்வன்

சிங்களவர்களின் முதல் தலைவரை பிரித்தானியாவின் சிறையிலிருந்து  மீட்டுக் கொடுத்தவர்கள் ஈழத் தமிழர்களே என்றும் அந்த நிலையை ஈழத் தமிழ் மக்கள் அன்று பெற்றிருந்தது கல்வி அறிவினால்தான் என்றும் கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையத்தின் செயலாளர் தீபச்செல்வன் குறிப்பிட்டார்.
பச்சிளைப் பள்ளிப் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற அகவிழி திறப்போம் – தலைத்துவ திறன்சார் செயலமர்வில் தலைமை வகித்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்..
ஈழத் தமிழர்கள் தங்களுடைய அறிவாலும், மொழியாற்றலாலும், பண்பாட்டினாலும் உலகறியப்பட்ட மக்களாக இருந்தனர். அன்றைய சிலோனில் பிரித்தானியரின் அரசில் முதல் பிரதிநிதியாக சேர் பொன் இராமநாதன் அங்கத்துவம் பெற்றார். அவருடைய கல்வி ஆற்றலே அந்த சந்தர்ப்பத்தை வழங்கியது.
இலங்கையின் முதல் சிங்கள தலைவரை பிரித்தானிய சிறையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து கொடுத்தவர்கள் ஈழத் தமிழர்களே. அதன் பின்னர்தான் இலங்கை என்ற ஒரு நாட்டின் வரலாறே தொடங்கியது. அத்துடன் நாங்கள் ஆட்சி அதிகாரங்களை தொலைத்ததும் அப்போதுதான்.
பிந்தைய வரலாறு எங்களுக்கு எதிராக மாறியது. எங்களுடைய கல்வியை, எங்கள் மொழியை, எங்கள் பண்பாட்டை திட்டமிட்டு அழித்தார்கள். ஒடுக்கினார்கள். அன்றைக்கு தீர்மானிக்கும் சக்தியை கல்வியால் பெற்றிருந்தோம். எங்கள் அறிவுப் புலத்தை அழிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் யாழ் நூலக எரிப்பு.
அறிவின் அடையாளமாக இத் தீவில் இருந்த ஈழத் தமிழ் மக்கள் பின்தள்ளப்பட்டு ஒடுக்கப்பட்டோம். எங்கள் பண்பாட்டை அழித்து அதன் ஊடாக கல்வியை வாழ்வை ஒடுக்கினார்கள்.  2009 முள்ளிவாயக்கால் இனப்படுகொலை வரை வெளிப்படையாக நடந்த இந்த பண்பாட்டழிப்பு, கல்வி ஒடுக்கல் இப்போதும் மறைமுகமாக தொடர்கிறது. 2009இற்கு முன்னர் இருந்த கல்வியின் நிலை அதன் பின்னர் பின்தள்ளப்பட்டமைக்கு இதுவே காரணம்.
சமீபத்திய பெறுபேறுகள், மாணவர்களின் சாதனைகள் நாம் மீண்டு வருவதனையே உணர்த்துகிறது. மாபெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனத்தின் தலைமுறைகள், கல்வியின் ஊடாக, தமிழ் மொழி குறித்த அக்கறையின் ஊடாக, தமிழ் பண்பாடு குறித்த விழிப்புணர்வின் ஊடாகவே மீண்டு எழ முடியும். அறிவின் ஊடாகவே எங்களை நிலைப்படுத்த முடியும்.
கனடாவில் உள்ள புலம்பெயர்ந்த உறவு ஒருவரின் அனுசரனையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட உதவிப் பதிவாளர் இ. சர்வேஸ்வரன், நாடக ஆசிரியர் செல்வா ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு விரிவுரைகள் மற்றும் பயிற்சிகளை வழங்கினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன்,  பச்சிளைப் பள்ளி பிரதேச செயலாளர் எஸ். அனுஷா, பளை மத்திய கல்லூரி அதிபர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *