இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.வரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அனந்தி கோரிக்கை

யாழ்ப்பணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன்  கோரிக்கை    விடுத்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

இராணுவத்தை உற்சாகபடுத்தவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரவுள்ளார். ஐநா கூடியுள்ள இந்த நேரத்தில் சரணடைந்த காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்பு கூறல் இல்லை , தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இல்லை பெரிதும் எதிர்பார்க்கபட்ட வடக்கு கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படவில்லை. ஐநா சபைக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி யாழ்ப்பணத்திற்கு வரும் நிகழ்வு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மை பயக்க கூடியதாக அமைய போவதில்லை. எனவே நாளை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.

இது மக்கள் போராட்டமாக இருக்க வேண்டும் எனவே எல்லோருமே ஒன்றினைந்து போராட முன் வரவேண்டும். ஜனாதிபதிக்கு நாளைக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிடின் ஐநாவில் சொல்ல போகின்றார்கள் நாங்கள் யாழ்ப்பாணம் சென்றோம் மக்கள் மிக அமைதியாக இருக்கின்றார்கள் அங்கே எந்தவொரு பிரச்சனையும் இல்லை என கூறுவார்கள்.

எனவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் மிக பெரிய மக்கள் போராட்டமாக வெடிக்க வேண்டும். அந்த போராட்டத்தில் தனியே பாதிக்கபபட்டவர்கள் மாத்திரமில்லாது அனைவரும் ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *