இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

மீள்குடியேற்றத்திற்கோ கடற்றொழிலுக்காக அல்லாது திருவிழாவுக்காக சொந்த ஊர் சென்று திரும்பிய இரணைதீவு மக்கள்


கிளிநொச்சி பூநகரி இரணைதீவு மக்கள் மீள்குடியேற்றத்திற்கும் தங்கியிருந்து கடற்றொழில் புரிவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் இரணைதீவில் உள்ள புனித செபமாதா தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரணைதீவு மக்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் இருந்து  02.03.2017 பிற்பகல் 3.00 மணிக்கு 336 குடும்பங்களும் இரணைதீவிற்கு படகுகளில் சென்றனர். இரணைதீவு புனித செபமாதா தேவாலயத்தில்  03.03.2017 காலை  8.00 மணிக்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொள்ள கடற்படையினர் அனுமதி வழங்கிய நிலையில் பூநகரி பிரதேச செயலகத்தின் ஒழுங்குப் படுத்தலில் இரணைமாதா நகரில் இருந்து மேற்படி குடும்பங்கள் 02-03-2017  மாலையே இரணைதீவிற்குப் படகுகளில் பயணித்தனர்;.

03-03-2017 காலை 8.00 மணிக்கு வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர்  முழங்காவில் இரணைமாதா நகரிற்கு இரணைதீவில் இருந்து மக்கள் படகுகளில் திரும்பியுள்ளனர்.  2009ம் ஆண்டின் பின்னர் மூன்றாவது தடவையாக வழிபாட்டிற்கு இரணைதீவிற்கு மக்கள் சென்று திரும்பியுள்ளனர்.

இரணைதீவில் அனுமதித்த நேரத்தினை விட கூடுதலான நேரம் செலவிட கடற்படையினர் அனுமதிக்கவில்லை என இரணைதீவு சென்று திரும்பிய மக்கள் தெரிவிக்கின்றனர்.  1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள குடும்பங்கள் இரணைதீவில் மீள்குடியேறவும் கடற்றொழிலில் ஈடுபடவும் அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் அவை மறுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு போராட்டம் நடாத்திய வரும் நிலையில் இரணைதீவின் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துள்ள கடற்படையினர் மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தங்கி நின்று கடற்றொழில் செய்வதற்கும் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்;டச் செயலகத்திலும் பூநகரி பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இரணைதீவில் மீள்குடியேறவும் தங்கி நின்று கடற்றொழில் புரியவும் அனுமதிக்குமாறு இரணைதீவு மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் இரணைதீவிற்கு நேரடியாகச் செல்வோம் என எடுத்த முடிவு கூட நடைமுறைப்படுத்தவில்லை. அரசின் செல்வாக்கு உள்ள அரசியல்வாதிகள் இரணைதீவிற்குச் சென்றனர். மக்களை மீள்குடியேற்றுவோம் என அறிக்கைகளும் விட்டனர். அவை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இரணைதீவின் மக்கள் ஆலய வழிபாட்டிற்கு மட்டும் அனுமதிக்க கடற்படையினர் அவர்களை மீண்டும் இரணைமாதாநகரிற்கு அனுப்புவதில் குறியாக இருந்தனர். இரணைதீவு மக்களும் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தயாராகி வருகின்றனர். மக்களின் போராட்டத்தினை தாமதப்படுத்துமாறு சில அரசியல்வாதிகள் மக்களிடம் வேண்டியுள்ளதாகவும் இரணைதீவு மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *