இலங்கை பிரதான செய்திகள்

சுமணனை தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை. சித்திரவதை வழக்கில் எதிரிகள் சாட்சியம்.

சந்தேக நபரான சுமணனை நான் தாக்கவோ காயமேற்படுத்தவோவில்லை என  முன்னாள் சுன்னாக காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார யாழ்.மேல் நீதிமன்றில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.  சுன்னாகம் காவல் துறையினரால் கொள்ளை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , இன்றைய தினம் எதிரிகள் தமது வாக்கு மூலத்தை எதிரி கூண்டில் இருந்து மன்றில் வழங்கினர். அதன் போதே அவ்வாறு வாக்கு மூலம் அளித்தார்.

குறித்த வழக்கின் முதலாவது எதிரியான அப்போதைய சுன்னாக காவல்நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார எதிரி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளிக்கையில் ,

கொள்ளை தொடர்பான விசாரணை. 

நான் யாழ்ப்பணத்தில் பல காவல்நிலையங்களில் கடமையாற்றி உள்ளேன். சுன்னாக காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த வேளை கடந்த 2011. 11. 22 ஆம் திகதி புன்னாலைக் கட்டுவான் தெற்கில் வசிக்கும் உமாசந்தி என்பவரது வீட்டில் இரவு வேளை உட்புகுந்த கொள்ளையர்கள் 33 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் , கைதொலைபேசி , கமரா , மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டன என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

சுமணன் கைது. 

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இருந்தேன். 25 ஆம் திகதி காலை கொள்ளை சம்பவம் தொடர்பில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , மொழிபெயர்ப்பு உதவிக்காக மயூரனையும் , மற்றும் ராஜபக்ச , வீரசிங்க , ஜெயந்த , கோபி , ஆகியோருடன் சாரதி லலித்தை அழைத்துக்கொண்டு காவல்துறை ஜீப் வாகனத்தில் சந்தேக நபரை கைது செய்ய சென்று சுமனை கைது செய்தோம். காலை 10.30 மணியளவில் காவல்நிலையத்தில் சுமனை முற்படுத்தினோம்.

அதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அன்றைய தினம் இரவு மேலும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்தோம். பின்னர் இரவு 11.35 மணியளவில் சுமனனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தை பெற்றேன். அதற்கு மொழி பெயர்ப்பு உதவியாக மயூரன் கூட இருந்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை தேடி சென்றோம். 

அவ்வாறு சுமனனிடம் பெற்ற வாக்கு மூலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்னிடம் தான் உண்டு அவை இருக்கும் இடத்தை காட்ட முடியும் என கூறினார். அதன் பின்னர் மறுநாள் 26ஆம் திகதி காலை 6.50 மணியளவில் நகைகள் இருக்கும் இடத்தை காட்ட என சந்தேக நபரை நானும் , ராஜபக்சே , ஜெயந்த , மயூரன் வீரசிங்க ஆகியோர் கைவிலங்கு போட்டு சந்தேக நபரின் வழிகாட்டலில் சென்றோம்.

முதலில் எம்மை புன்னாலைக்கட்டுவான் பகுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு இல்லை முகமாலையில் உள்ளது என அங்கே அழைத்து சென்றார் பின்னர் அங்கில்லை கிளிநொச்சில இருக்கு என கிளிநொச்சிக்கு அழைத்து சென்றார். கிளிநொச்சி நகரில் இருந்து உள்ளே சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திற்கு உள்ளே அழைத்து சென்றார்.

எமது பாதுகாப்பில் இருந்து தப்பி சென்றார்.

ஒரு இடத்தில் திடீரென வாகனத்தை நிறுத்த கூறினார். நாம் வாகனத்தை நிறுத்தி இறங்க முற்பட்ட போது ராஜபக்சே என்பவரை தள்ளிவிட்டு சந்தேக நபர் எமது பாதுகாப்பில் இருந்து தப்பி அருகில் இருந்த காட்டுக்குள் ஓடினார்.

அந்நேரம் மதியம் 12.10 மணி இருக்கும் நாம் தப்பி சென்ற சந்தேக நபரை தேடினோம். அக்கால பகுதி யுத்தம் முடிவடைந்து சில வருடங்களே ஆனா காலம் என்பதனால் அந்த காட்டு பகுதிக்குள் வெடி பொருட்கள் இருக்கலாம் என்பதனால் மனிதர்கள், மிருங்கங்கள் சென்ற கால் தடங்களை அடியோதத்தியே காட்டுக்குள் சென்று சந்தேக நபரை தேடினோம்.

குளத்தில் இருந்து உடலை மீட்டோம். 

அவ்வேளை அப்பகுதியில் இருந்த குளகட்டை அவதானித்து அந்த கட்டில் ஏறி நடந்து சென்றோம். அவ்வேளை திடீரென எமக்கு முன்னே சென்ற மயூரன் அங்கே கள்ளன் குளத்தினுள் வீழ்ந்து கிடக்குறான் என கத்தினார். நாமும் அதனை அவதானித்து ஓடி சென்று சந்தேகநபரை குளத்தில் இருந்து மீட்டு கரைக்கு சேர்த்தோம்.

அவ்வேளை அவர் பேச்சு இல்லாமல் இருந்ததால் உடனே வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். கிளிநொச்சி வைத்திய சாலைக்கு மாலை 3.30 மணியளவில் கொண்டு வந்தோம். அங்கு வைத்தியர் சந்தேக நபரை பரிசோதித்து விட்டு உயிரிழந்து விட்டார் என தெரிவித்தார்.

அதன் பின்னர் அந்த தகவலை சுன்னாகம் காவல் நிலையத்தில் அப்போது பதில் பொறுப்பதிகாரியிடம் சுமணன் இறந்த விடயத்தை கூறி ஏனைய நான்கு சந்தேக நபரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க கூறினேன்.

பின்னர் இறந்த சுமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொலநறுவை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றோம். குறித்த சந்தேக நபரை நான் தாக்கவோ காயமேற்படுத்தவோ வில்லை என தனது வாக்கு மூலத்தை எதிரி கூண்டில் இருந்து அளித்தார்.  அதனை தொடர்ந்து இரண்டாம் எதிரியான ஞா.மயூரன் எதிரிக் கூண்டில் நின்று வாக்கு மூலம் அளிக்கையில் , 

கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு சென்றோம். 

நான் அக்கால பகுதியில் சுன்னாகம் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன் 2011. 11. 25ஆம் திகதி காலை கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு சென்றோம். நீர்வேலி சந்தி பகுதியில் வாகனத்தை நிறுத்தி அங்கு நின்ற ஒருவரை அருகில் வருமாறு பொறுப்பதிகாரி அழைத்தார். பின்னர் என்னிடம் அவரின் முழு பெயர் விலாசம் என்பவற்றை கேட்குமாறு சிங்களத்தில் கூறினார். நான் அதனை அந்த நபரிடம் தமிழில் கேட்டேன். அதற்கு அவர் ஸ்ரீஸ்கந்தராஜா சுமணன் எனவும் புன்னாலைக்கட்டுவான் எனவும் கூறினார்.

 சுமனிடம் வாக்கு மூலம் எடுத்தோம். 

அதனை தொடர்ந்து , புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் உம்மை கைது செய்கின்றோம் என கூறுமாறு பொறுப்பதிகாரி சிங்களத்தில் கூறினார். அதனை நான் அவரிடம் கூறினேன். அதனை தொடர்ந்து அவரை கைது செய்தோம். பின்னர் அன்றைய தினம் இரவு 11.20 மணியளவில் சுமனிடம் வாக்கு மூலம் எடுக்க வேண்டும் என பொறுப்பதிகாரி என்னை அழைத்தார். நான் அங்கு சென்று சுமணனின் வாக்கு மூலத்தை பெற்றோம்.

எந்த குற்றமும் செய்யவில்லை.

மறுநாள் காலை கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை காட்டுவதாக சுமணன் கூறிய இடத்திற்கு சுமனை அழைத்து சென்றோம். அவ்வாறு கிளிநொச்சி அழைத்து சென்ற வேளை ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறி வாகனம் நிறுத்தப்பட்டவுடன் எமது பாதுகாப்பில் இருந்து தப்பி காட்டுக்குள் ஓடினார்.

பின்னர் நாம் அவரை அப்பகுதியில் தேடினோம். அவ்வேளை அங்கிருந்த குளகட்டின் வழியாக நடந்து செல்லுகையில் சுமணன் மேல் நோக்கிய நிலையில் குளத்தினுள் வீழ்ந்து கிடந்தார். அதனை நான் அவதானித்து எனக்கு பின்னால் வந்த பொறுப்பதிகாரிக்கு தெரிய படுத்தி னேன். அதன் பின்னர் சுமணனை மீட்டு கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதித்தோம்.அங்கு சுமணன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.

நான் எந்த குற்றமும் செய்யவில்லை. சுமனனுக்கு அடிக்கவோ அச்சுறுத்தவோ இல்லை என வாக்கு மூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து மூன்றாவது எதிரியான தேவதயாளன் எதிரி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளிக்கையில் ,

எனக்கு சுமணன் யாரென்றே தெரியாது. 

நான் சுன்னாகம் காவல் நிலையத்தில் கடமையாற்றுகிறேன். 2011.11.22 ஆம் திகதி நான் விடுமுறை எடுத்து வீட்டுக்கு சென்று இருந்தேன். மீண்டும் 24ஆம் திகதி மாலை 6.45 மணியளவில் காவல்நிலையம் வந்தேன். அன்றைய தினமும் எனக்கு விடுமுறை என்பதனால் விடுதியில் தங்கி இருந்தேன். மறுநாள் 25ஆம் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றுக்கு சென்று  விட்டேன். மாலையே மீண்டும் சுன்னாகம் காவல் நிலையம் வந்தேன்.

கொள்ளை சம்பவம் தொடர்பிலையோ , அது தொடர்பிலான விசாரணை தொடர்பாகவோ எனக்கு எதுவும் தெரியாது. இந்த மரணம் தொடர்பிலான எந்த விசாரணையும் என்னிடம் எந்த சந்தர்ப்பத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. எனக்கு சுமணன் என்பவரை யாரென்றே தெரியாது. நான் அவரை கண்டதே இல்லை .

ஆனால் இந்த சித்திரவதை வழக்கில் முதலாவது சாட்சியமாக இருக்கும் சுரேஷ் என்பவரை 2015 ஆம் ஆண்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான  மடிக்கணணி ஒன்றினை  5 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற வேளை சந்தேகத்தில் கைது செய்தேன்.

அதே போன்று அவருக்கு எதிரான தாபரிப்பு வழக்கில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி இருந்தேன்.

அந்நிலையில் 2016. 10.19 ஆம் திகதி அன்று எனது கைத்தொலைபேசிக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கதைப்பதாக கூறி , எனக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றில் சித்திரவதை வழக்கு இருக்கு மன்றில் முன்னிலையாக வேண்டும் என கூறப்பட்டது. அதன் அடிப்படையில் நான் மேல் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து நான் அன்றில் இருந்து இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளேன் என தெரிவித்தார்.

குற்றசாட்டை மறுக்கிறேன்.

அதனை தொடர்ந்து வழக்கின் 4 எதிரியான சஞ்சீவ ராஜபக்சே , 5ஆம் எதிரான ஜெயந்த 6ஆம் எதிரியான வீரசிங்க ஆகியோர் எதிரி கூண்டில் நின்று என் மீதான குற்றசாட்டை மறுக்கிறேன். என தனித்தனியே வாக்கு மூலம் அளித்தனர்.

7ஆம் எதிரியான கோபி மன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்கு எதிராகபிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.  அதனை தொடர்ந்து 8 ஆவது எதிரியான லலித் எதிரி கூண்டில் நின்று சாட்சியம் அளிக்கையில்,

எனக்கு எதுவும் தெரியாது.

 நான் சுன்னாகம் காவல்நிலையத்தில் காவல்துறை வாகன சாரதியாக கடமையாற்று கிறேன். கடந்த 2011.11.25 ஆம் திகதி காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்களுடன் வாகனத்தில் சென்றேன். பலாலி வீதியால் சென்று கொண்டிருந்த போது ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு பொறுப்பதிகாரி கூறினார். நான் நிறுத்தினேன். வாகனத்தில் இருந்து இறங்கி சென்றனர்.

ஒருவரை கைது செய்து கொண்டு வந்து வாகனத்தில் ஏற்றினார்கள். அதன் பின்னர் பொறுப்பதிகாரி வாகனத்தை காவல் நிலையத்திற்கு செலுத்துமாறு கூறினார். நான் வாகனத்தை செலுத்தினேன். காவல் நிலையத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டேன். அது தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது. நான் கிளிநொச்சி செல்லவில்லை என எதிரி கூண்டில் நின்று வாக்கு மூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து எதிரிகளின் வாக்கு மூலம் பதியப்பட்டதனை அடுத்து எதிரி தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக வழக்கினை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

வழக்கின் பின்னணி. 

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.

அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த அப்போதைய நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , மயூரன் , தயாளன் , சஞ்ஜீவ ராஜபக்சே , ஜெயந்த , வீரசிங்க , கோபி (குறித்த நபர் நாட்டில் இல்லை , அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து நீதிமன்றினால் பிறப்பிக்கபட்டு உள்ளது.) லலித் , ஆகிய    8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள்  மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில் 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளன.

அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும் , கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ள 5 பேர் உட்பட  8 பேருக்கு எதிராக சித்திரவதை குற்ற சாட்டு சுமத்தப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *