இலங்கை பிரதான செய்திகள்

அம்பாறையில் மத வழிபாட்டு தலத்தில் உணவு விஷமாகியமை தொடர்பில் இருவர் கைது

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட சமைத்த உணவு விஷமானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரண்டு சமையல்காரர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமன பகுதி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  பிணை நிபந்தனையை சந்தேகநபர்கள் இருவரும் பூர்த்தி செய்யாத நிலையில் வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 950 பேர் வரை வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் இரு பெண்கள் உட்பட மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

சம்பவத்தில் நோயுற்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறக்காமம், அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய வைத்தியசாலைகளில் 4-ஆவது நாளாக வைத்தியசாலைகளில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே சிகிச்சையின் பின் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர், நோயின் தாக்கத்திலிருந்து இன்னமும் விடுபடவில்லை என கூறப்படுகின்றது.  வயிற்று வலி , மயக்கம் , வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுடன் மீண்டும் வைத்தியசாலைகளை நாடி வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமையல்காரர்கள், சமையல்க்கு உதவி புரிந்தவர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4-ஆவது நாளாகவும் விசாரணைகள் தொடருகின்றன.

உணவு விஷமானதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் புலனாய்வு விசாரணை தேவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் மாகாணத்திற்குரிய துணை பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.
BBC

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *