இலங்கை பிரதான செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு 7 நாட்களுக்குள் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலத்தை நீடிக்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில் மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அதன் போது சந்தேக நபர்கள் 9 பேரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதன் போது அரச சட்டவாதி மன்றில் விண்ணப்பம் செய்கையில் , குறித்த வழக்கு தொடர்பான குற்ற பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் என்பன எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் பரப்படுத்தப்படும். அதுவரையில் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோரினார்.

அதனை தொடர்ந்து 4ஆம் , 7ஆம் மற்றும் 9 ஆம் சந்தேக நபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம விண்ணப்பம் செய்கையில் , குறித்த வழக்கில் கைது செய்யபப்ட்டு உள்ள தனது தரப்பினர்கள் இரு வருட காலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கபப்ட்டு உள்ளனர்.  சந்தேக நபர்களை இரண்டு வருட காலத்திற்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லை எனவே எனது தரப்பினரை தகுந்த பிணையில் விடுவிக்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி உத்தரவு பிறப்பிக்கையில் , மரண தன்டனை மற்றும் ஆயுள் தண்டனை குற்றங்களுக்கு உரிய சந்தேக நபர்கள் பிணை தொடர்பில் மேல் நீதிபதிக்கு தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு. ஆகவே சந்தேக நபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *