இலங்கை பிரதான செய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு 10.6 மில்லியன் ரூபா நிவாரணம் வழங்கும் பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது  தொடர்பான பிரேரணையொன்று இன்று கிழக்கு மாகாண சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய இன்று கூடிய கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு  சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி தலைமையில் இடம்பெற்ற போது இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையால் நிவாரணம் வழங்குவது தொடர்பான பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  எமது நாட்டை அண்மையில் உலுக்கிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் என்பன நாட்டின் அண்மித்த வரலாற்றில் ஏற்பட்ட பாரியதொரு பேரழிவாகவே கருத முடியும் எனத் தெரிவித்தார்.

கடந்த  24 மணித்தியாலத்துக்குரிய தேசிய இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின் பிரகாரம் 206 பேர் உயிரழந்துள்ளதுடன் 92 பேர் காணாமல் போயுள்ளனர்.

அது மாத்திரமன்றி 6 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேசத்தின்  சக சகோதரர்களாக நாமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவையுள்ளது.

கிழக்கு மாகாண மக்கள் சுனாமி மற்றும்  வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்டிருந்த போது எமக்கு எமது நாட்டின் சக மக்கள் உதவிக்கரம் நீட்டியிருந்தார்கள்.

ஆகவே கிழக்கு மக்களும் தேசிய அனர்த்த நிலைமைகளின் போது மனிதாபிமானத்தை மறந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து எமது மக்களுக்கு நாம் உதவ முன்வந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

அதனடிப்படையில்  கிழக்கு மாகாண சபை வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு  10.6   மில்லியன் ரூபாவை நிவாரணமாக வழங்க வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிகின்றேன் என தெரிவித்தார்.

இதையடுத்து கிழக்கு மாகாண சபையினால் இந்தப் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் குறித்த 10.6  மில்லியன் ரூபா நிதியை விரைவில் பாதிக்கப்பட்டு மக்களுக்கு சென்றடைவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் கூறினார

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *