உலகம் பிரதான செய்திகள்

பிரான்ஸின் பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கட்சி முன்னிலையில் உள்ளது:-


பிரான்சில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் முதலாம் சுற்று வாக்குப்பதிவுகள் நேற்று இடம்பெற்றன.

577 இடங்களை கொண்ட பிரான்சின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுகிற வேட்பாளரே வெற்றி பெற முடியும்.

அவ்வாறு எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையோ அங்கெல்லாம் குறைந்தபட்சம் 12½ சதவீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களை கொண்டு 2-வது சுற்று தேர்தல் எதிர்வரும் 18-ந் தேதி நடைபெற இருக்கிறது.

நேற்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகி இரவு 8 மணிக்கு முடிவுற்றது. பொதுவாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்ததாகவும், வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலின் கீழ் உள்ள பிரான்ஸின் நேற்றைய தேர்தலில் 50 ஆயிரம் பொலீசார் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த தேர்தலில் அதிபர் இமானுவல் மேக்ரானின் எல்.ஆர்.இ.எம். கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள 11 பிரெஞ்சு தொகுதிகளில் 10 தொகுதிகளில் மேக்ரான் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதே நிலையே உள்நாட்டிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் மேக்ரானின் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பிரான்சில் மேக்ரான் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல் சுற்று வாக்குப்பதிவில் எமானுவேல் மேக்ரான் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். இத்தகவல்கள் பிரான்சின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்கள் சேர்க்கப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *