இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல் நடத்த முடியாதா? பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்

-பேராசிரியர் ரட்ணஜீவன் கூலினால் எழுதப்பட்ட இப்பத்தி குளோபல் தமிழ்ச் செய்திகளால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

election

நான் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு என்று சொல்லப்படும் அமைப்பின் அங்கத்தவர். ஏன் “சுயாதீன” என்ற சொல்லை எம்மை விழிக்கப் பயன்படுத்துகின்றனர் என எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், எமக்கென நியமிக்கப்பட்ட எந்தவொரு சட்ட விடையத்திலும் இந்தச் சொல்லைக் காண முடியவில்லை. இருந்தபோதும், பொதுமக்கள் கண்ணோட்டத்தில் இந்தச் சொல் இருக்கவே செய்கின்றது. அவர்கள் எம்மைச் சுயாதீனமாகச் செயற்பட்டு ஏற்கனவே காலம் தாமதித்து விட்ட உள்ளூராட்சித் தேர்தல்களை உடனே நடத்துமாறு எதிர்பார்க்கிறார்கள். குடியாண்மையில் இது ஒரு இயல்பான எதிர்பார்ப்பே.

இதற்கிடையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் (பைசர் முஸ்தபா), சனாதிபதி, மற்றும் பிரதமர் அடங்கலாகப் பலர் வெவ்வேறு தேதிகளில் வெளியிட்ட பல முரண்பாடான அறிக்கைகள் மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  “மகிந்த ராஜபக்சவின் தலைமையில் புதிதாக வரும் அரசியல்ச் சக்தி ஆளும் கூட்டணியின் நிலையை மோசமாகப் பாதிக்கும் என்பதோடு சவாலாகவும் அமையும்” என்பதாக இதற்குக் காரணம் கூறுகின்றது ” த ஐலண்ட்” நாளிதழில் 13.10.2016 அன்று வெளியான ஆசிரியர் தலையங்கம். தேர்தல் முறைமையை மறுசீரமைத்தல் என்பதைச் சாட்டாகக் காட்டி அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலைக் காலவரையறையின்றித் தள்ளி வைக்கின்றது. இந்த ஆதாரம் “த ஐலண்ட்” நாளிதழ் தன்னைச் சரியென்று ஆக்குகின்றது.

கூட்டு எதிர்க்கட்சி அடிக்கடி எம்மைச் சந்தித்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோருகின்றது. அரசாங்கத்திற்கு வெளியே இருப்பவர்கள் எல்லோரும் நாம் சுயாதீனமானவர்கள் எனவும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் எம்மீது கடிகிறார்கள். நமது சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அரசாங்கத்திற்கு பக்கச்சார்பாக நடந்துகொள்வதாக ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்து கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றஞ் சுமத்தியுள்ளனர். இவ்வாறாக எல்லா அழுத்தங்களும் எம்மீதே விழுகின்றது.

சுயாதீன ஆணைக்குழுவின் செயலாளர்களைத் தாமே நியமித்ததாகவும் அவர்களின் வரையறைகளை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் தமக்கு நடப்பவை அனைத்தையும் தெரிவிக்க வேண்டுமெனவும் எச்சரித்ததாக “எக்கனமிக்ஸ் நெக்ஸ்ட்” என்ற நாளிதழில் 12.10.2016 அன்று வெளியான செய்தி எமது சுயாதீனத்தின் தன்மை எத்தகையது என்பதைத் தெளிவுறக் காட்டுகின்றது. அத்துடன் சனாதிபதி இவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டதாக இந்த நாளிதழ் மேலும் தெரிவிக்கிறது.

தேர்தல் ஆணைக்குழுவில் அதன் தலைவரை நாமே தீர்மானிக்கின்றோமே தவிர சனாதிபதியல்ல. எனவே, நாம் பாராளுமன்றுக்கே பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோமே தவிர சனாதிபதிக்கல்ல. நாம் சுயாதீனமானவர்கள் என்ற நம்பிக்கையுடனேயே இந்த தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாவதற்கு இயைந்தோம். எமது ஆணைக்குழு சுயாதீனமானது என்றும் அது பாராளுமன்றத்திற்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளது என்று சொல்லியே எமது எமது பணியைத் தொடங்கினோம். நாம் இந்தச் சனாதிபதி அச்சுறுத்தலை மேலும் மேலும் உணர்ந்து இப்போது அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிறோம்.

இரவு விடுதிக்கலாட்டா அடங்கலான எத்தனையோ சட்டவிரோத விடையங்கள் இலங்கையில் நடைபெறுகையில், இந்த அச்சுறுத்தல் பீதியடையச் செய்கின்றது. எல்லாவற்றிலும் மோசமாக, அதே “எக்கனமிக்ஸ்ட் நெக்ஸ்ட்” என்ற நாளிதழ் தனது அடுத்த கட்டுரையில் “பிரிவினைகோரிய தமிழ்ப் புலிகளை வெற்றிகரமாக நசுக்கிய இராணுவத்தை வழிநடத்திய இராணுவத் தளபதிகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து அவமானப்படுத்தக் கூடாது” என சனாதிபதி தெரிவித்ததாகக் கூறியுள்ளது. வேறு சொல்லில் குறிப்பிடுவதாயின், பத்தாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை கொன்றவர்களுக்குக் “கதாநாயக அந்தஸ்து”. இவை இன்னும் உள்ளத்தை உறைய வைத்துள்ளது.

கடும் நடவைக்கை என்ற அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், நாம் இந்த அச்சுறுத்தப்பட்டுள்ள சனநாயகத்திலிருந்து  பேசியேயாக வேண்டும். எமது ஆணைக்குழுவின் முதன்மையற்ற தன்மை சில காலமாக வருகின்றது. 14.09.2016 அன்று அமைச்சர் முஸ்தப்பா தேர்தல் நடத்துவதற்கான பல ஊகத் தேதிகளுடன் உள்ளூராட்சி தேர்தல் குறித்துக் கலந்துரையாடுவதற்காகத் தமது அமைச்சிற்கு எம்மை அழைத்தார். உள்ளூராட்சி வரைவு தேர்தல் சட்டம் தொடர்பில் அமைச்சரவைத் துணைக்குழுவைச் சந்திக்க இருப்பதாக அவரால் சொல்லப்பட்டதால் நாம் அங்கு போனோம். இல்லை எனில் போயிருக்க மாட்டோம். கொழும்பில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, நாம் 4:30 இக்கு கலந்துரையாடல் நடைபெற இருந்த வேளையில் யூனியன் பிளேசில் 4:00 மணிக்கு நின்றோம். எனினும் இயலுமான வேகத்தில், நாம் சென்றடந்தோம். (மகிந்த தேசப்பிரிய தனது வேலைகளுடன் இருந்தார். செயலாளர் கமல் பத்மசிறி எமக்கு தேநீர் கொடுத்து அமைச்சர்களின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருப்பதற்கு ஓரிடத்தில் அமர்த்தினார். அமைச்சர் முஸ்தப்பா சிறு மன்னிப்புக் கேட்டவாறு 6:30 இக்கு உலங்குவானூர்தியில் வந்தடைந்தார். அமைச்சரவைத் துணைக்குழுவில் உள்ள ஏனைய எந்தவொரு அமைச்சர்களும் (றிசாத் பதியூதின், மகிந்த அமரசிங்க, மனோகணேசன், ரவூப் கக்கிம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேய வர்த்தன, விஜயதாசராஜபக்ச) தாம் வர மாட்டோம் என ஒரு செய்தியைக் கூடத் தெரிவிக்காது சமூகமளிக்கவில்லை.

கலந்துரையாடலின் போது, எங்களில் ஒருவர் சட்ட வரைபை வரையுமாறு கேட்கப்பட்டு அந்த வேலைக்கு ஒரு கால வரையறையையும் வழங்குமாறு கேட்கப்பட்டது. ஒழுக்கப் பற்றாக்குறையே இந்த நாட்ட்லுள்ள சிக்கல். இந்தக் கால தாமதம் மற்றும் கால வரையறை போன்றன அவரிற்கும் அவரது சக அமைசர்களுக்கும் பொருந்தும் என்பதைக் கருத்திலெடுக்க வேண்டும்.

இருந்த போதும், கூட்டம் முடிவுறும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கவனமான ஒரு கால வரையறக்கு நாம் உடன்பட்டோம். தேர்தலுக்கு முன்னரான குறித்த செயல்களுக்கான கால வரையறை உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல்கள் (2012 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம்) மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. எல்லைக் கட்டுப்பாட்டுக்குழு தனது வேலைகளைச் செய்வது, மேல் முறையீட்டுக் குழு முறையீடுகளைக் கேட்பதற்கும் மொழியாக்கம் செய்வது, பொதுக் கணக்கெடுப்பாளர் வார்ட்டுகளையும் அரசிதழிலில் இடம்பெற வேண்டிய வார்ட்டுகளை கண்டறிது போன்றன மேற்குறித்த சட்டமூலத்தின் பிரகாரமானதாகும். நாம் 2015 நவம்பர் பதவியை பொறுப்பெடுத்தலிருந்து முதன் முறையாக உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதியைப் பெற்றோம். அது 2017 மார்ச் மாதத்திலிருக்கும்.

அந்த மகிழ்ச்சியான முடிவுக்கு வந்த பின்னர், அமைச்சர் பூறிடும் குரலில் சொன்னார் “நான் தாமதத்திற்காக குற்றஞ் சாட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அப்படி நீங்கள் யாராவது கூட நினைக்கின்றீர்களா” என. அசோகா பீரிஸ் (எல்லைக் குழுத் தலைவர்) 15.08.2016 ஆம் திகதியளவில் தனது வேலைகளை முடித்துவிடுவதாக உறுதியளித்த போதும் ஒரு கோரப்படாத நீட்டிப்பை அமைச்சர் 31.10.2016 வரை வழங்கியபோது நான் அவ்வாறு நினைத்தேன் எனக் கூறினேன். அதற்கு “:அசோகா பீரிஸ் சாத்தியமில்லாத திகதிக்குள் முடிப்பதாக தனது உடல்நிலையை மோசமாக்கிக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு ஓய்வளித்தேன்” என வார்த்தை விளையாட்டாகக் கூறினார் அமைச்சர்.

அமைச்சர் முஸ்தப்பாவின் 2 மணி நேர தாமத்திற்கு மேலாக மிக மோசமான தாமதமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடந்து கொண்டார். அவர் எம்மை செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தெரிவுக் குழுவுடன் ஒரு கூட்டத்திற்க்காக அழைத்திருந்தார். அது 5:30 இக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றக் குழு அறை- 3 இல் அந்தக் கூட்டம் நடைபெறும் என நாம் தெரியப்படுத்தப்பட்டிருந்தோம். அந்த அறையை நாம் அடைந்த போது அங்கே ஏற்கனவே ஒருவர் மட்டும் இருந்தார். அவர் எமது ஆணைக்குழுவின் செயலாளராவார். நீண்ட நேரக் காத்திருப்பின் பின்னர் நாம் கேட்டுப் பார்த்ததில், எங்கே போகின்றார் எனக் கூறாமல் பிரதமர் பாராளுமன்றத்தை விட்டு வெளியே போய்விட்டதாகவும் இனி வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அறிந்தோம். காத்திருக்க வேண்டாம் என்றோ மன்னிக்கவும் என்றோ ஒரு வார்த்தை கூட எமக்குச் சொல்லப்படவில்லை. இது எமக்கு நாம் ஒரு பொருட்டே இல்லை எனச் சொல்லியது. அடுத்த நாள் இந்தக் கூட்டம் நடந்தது. எனக்கான காலாண்டுப் பயணப்படிகளை செலவு செய்த பின்னர், எனது பணத்தில் தேநீரைக் குடித்துக் கொண்டு படுக்கை விரிப்புக்களைக் கூட மாற்றும் வழக்கமில்லாத அரச விடுதிகளில் மேலும் தங்கியிருக்க விரும்பாமல், நான் யாழ்ப்பாணம் திரும்ப வேண்டியிருந்தது. எல்லாவற்றிற்கும் அப்பால் அடுத்த கூட்டத்திலும் பிரதமர் தலைமறைவாகி விடமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எல்லாவற்றிற்கும் மேலாக 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் வரை உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெற மாட்டாது என அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன கூறியதாக “த ஐலண்ட்” நாளிதழ் 12.10.2016  அன்று வெளியிட்ட செய்தி மிகவும் ஆச்சரியமானதாக இருந்தது. உள்ளூராட்சித் தேர்தல் குறித்து எந்த வகையிலான பொறுப்பும் இல்லாத ஒரு அமைச்சர் இப்படி ஒரு அறிவிப்பை விடுத்தமை எமக்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தியது.

கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு 12.10.2016 அன்று எமது ஆணைக்குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில் எமது தலைவர் எமது சினத்தை வெளிப்படுத்தியதுடன், செய்தித்தாள் அறிக்கையிட்ட பின்னர், அடுத்த வார ஆணைக்குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த விடையம் எடுத்துக்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இது குறித்து நான் மேலும் எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில், செய்தித்தாள் அறிக்கை ஆணைக்குழுவால் ஏற்றுக் கொள்ளும் வரையில், நான் எதனையும் கூறக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன்.

எனது பங்கிற்கு, உள்ளூராட்சித் தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவினை அழுத்துவேன். இது மக்களின் சனநாயக உரிமை. பொறியியலாளர்களுக்கான நெறிமுறைகள் குறித்து நான் கற்பிக்கும் போது, இரண்டு தெரிவுகள் முரண்பாட்டில் இருக்கும் போது அவற்றில் தெரிவினை மேற்கொள்வதற்காக அவற்றை ஒழுங்கு வரிசைப்படுத்த வேண்டுமென கூறுவேன். இந்த விடையத்தில், 2012 உள்ளூர் அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் ஏற்பாடுகளை அமல்ப்படுத்தவும் புதிய வார்ட்டுகளை வரையறுக்கவும் காத்திருக்க வேண்டியது ஒரு பக்கம். இந்தச் சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகளை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளோம். இது ஆங்கிலத்தில் வரையப்பட்டு தமிழிலும் சிங்களத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதில் வரிகளில் ஏதாவது முரண்பாடு இருப்பின் சிங்களத்தில் இருப்பதே சரியாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. இருந்தபோதும், சிங்களப் பதிப்பில் தவறுகள் உள்ளது. எடுத்துக்காட்டாக, பிரதிநிதிகள் வார்ட்டுகளுக்கு (உள்ளூராட்சி தேர்தலில் உள்ளவாறு) தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்குப் பதிலாக மாவட்டங்களுக்கு (பாராளுமன்றத் தேர்தலில் உள்ளவாறு) தெரிவு செய்யப்படுவார்கள் என்று சிங்களப் பதிப்பில் உள்ளது. இதனை நாம் பிரதமருக்குச் சுட்டிக்காட்டினோம். இந்த இலகுவான திருத்தத்தைச் செய்யக் கூட பிரதமர் கவனம் செலுத்தவில்லை.

மறு பக்கத்தில், எம்மிடம் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட எல்லைகள் உள்ளன. பழைய அரசாங்கத்தினால் வரையறுக்கப்பட்ட இந்த எல்லைகள் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆனால், இவை தற்போதைய சனாதிபதியால் அரசிதழில் அறிவிக்கப்பட்டுமாயிற்று. உடனடி தேர்தலைக் கோரும் சனநாயகப் பிரதிநிதித்துவம் என்கிற கொள்கையே எமக்கும் உண்டு. 2005 ஆம் ஆண்டு உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் என்ற சட்டமூலத்தின் 25 ஆவது சரத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், அவர்களின் பதிவிக்காலம் நிறைவடைவதற்கு 6 மாத காலங்கள் முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான கால எல்லை முடிவுற்று நீண்ட காலம் ஆகிவிட்டது. அதற்காக, மேற்குறிப்பிட்ட இந்தச் சரத்து உயிர்ப்பில் இல்லை என்றாகிவிடாது. ஒவ்வொரு வசந்தகாலத்தின் தொடக்கத்திலும் நீங்கள் உரமிட வேண்டியிருக்கின்றது எனில், வசந்தகாலத்தை ஒரு முறை தவறவிட்டு விட்டோம் என்பதற்காக உரத்தைப் போடுவதைக் கைவிட்டு விட வேண்டும் என்பதாக அர்த்தமாகாது அல்லவா. எனவே, தேர்தலை அறிவிக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

இந்த இரண்டு தெரிவுகளில் எதை தெரிவு செய்ய வேண்டும் என நாம் தீர்மானிக்க வேண்டும். பொதுவாக, இந்த விடையத்தில் அரசாங்கம் நேர்மையாகவும் முறையாகவும் நடந்துகொள்கின்றது எனில், அரசாங்கம் தனது வேலையைச் செய்யட்டும் என்று நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் இந்தத் தாமதங்களில் நேர்மையிருப்பதாகத் தெரியவில்லை. அதாவது,

அ) தேர்தல் திகதிகள் என வேறுபட்ட திகதிகளைச் சொல்லி மக்களுடன் விளையாடுதல்

ஆ) தேர்தல் ஆணையக்குழு தொடர்பில் எந்தக் கரிசனையும் இல்லாது செயற்படுதல்

இ) ஆணைக்குழுவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்த பின்னர் விடையத்திற்குச் சம்பந்தமேயில்லாத அமைச்சர் மூலம் முரண்பாடான அறிக்கையை வெளியிடல்

ஈ) இலகுவாக திருத்தக் கூடிய தவறுகளைக் கூடத் திருத்தாமல் இருத்தல் மற்றும் சனாதிபதியால் ஆணைக்குழு எச்சரிக்கப்பட்டமை

சனாதிபதியால் இன்னது என்று குறிப்பிடாமல் “கடும் நடவடிக்கை” எனக் குறிப்பிடப்பட்டதன் பயத்தின் மீது காத்திருக்கப் போகின்றோமா? மற்றும் மக்கள் தம்மால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் தமது சனநாயக உரிமைகளை அரசிடம் இழக்குமாறு விடப்போகின்றோமா? ஒரு பக்கச்சார்பானதாக கருதப்பட்டும் அதையே அப்படியே அரசிதழில் சனாதிபதி வெளியிட்டவாறான வரையறுக்கப்பட்ட வார்டுகளில் தேர்தலை நடத்தப்போகின்றோமா? இல்லை எனில், நீதிமன்றம் இதனைத் தீர்மானிக்கட்டுமா?

தேர்தலை அறிவிக்கும் தெரிவை ஆணைக்குழு செய்யுமாயின் நீதிமன்றினால் அது இக்கட்டுக்குள்ளாக்கப்படலாம். தலைமை என்ன நிலையில் இருக்கின்றதென்பது குறித்து செயல்படுவது சரியாக இருக்கும். உண்மையில், ஆணைக்குழுவினை அச்சுறுத்துவது மற்றும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களின் உரிமைகளில் விளையாடுவது போன்ற நினைப்பில் இருப்பவர்களுக்கு ஆணைக்குழு எடுக்கும் சரியான முடிவு தடையானதாகவே இருக்கும்.

அத்தியாயம்  XIV A 103 (2) வரையறுப்பதற்கிணங்க, ஆணைக்குழுவின் நோக்கம் என்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் மற்றும் வாக்கெடுப்பு என்பவற்றை நடத்துவதென்பதாகும். ஒரு குழுவின் விருப்பங்களிற்கு ஏற்ப தேர்தலை ஒத்திப் போடுவது என்பது சுதந்திரமான தேர்தலை அனுமதிக்கக் கூடும். ஆனால் அது நியாயமானதாக இருக்க முடியாது.

-பேராசிரியர் ரட்ணஜீவன் கூலினால் எழுதப்பட்ட இப்பத்தி குளோபல் தமிழ்ச் செய்திகளால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply