இலங்கை பிரதான செய்திகள்

பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவர்களை வேட்டையாட அரசாங்கம் முயற்சிக்கின்றது – மஹிந்த ராஜபக்ஸ


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவர்களை வேட்டையாடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தை கொண்டு வருவதன் மூலம், அரசாங்கம் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை செய்ய முனையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியவர்களை தண்டிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர்  இந்த பிரகடனத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அவசர அவசரமாக இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய சில வர்த்தமானி அறிவித்தல்களையும் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தங்களின் மூலம் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கையிடம் எந்தவொரு வெளிநாடும் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கோரிக்கை விடுக்கப்படும் போது இலங்கையில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட முடியாத நிலையில் அவரை குறித்த நாட்டிடம் ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தினை கொண்டு வருவதானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கும் புலி ஆதரவு நாடுகளுக்கும் ஆதரவளிக்கும் முனைப்பாகவே நோக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நீண்ட அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *