இலங்கை பிரதான செய்திகள்

முன்னாள் விடுதலைப் போராளிகளே குற்றவியல் சார் சம்பவங்களுக்கும் பொறுப்பு என கூறுவது, ஜனாதிபதியின் நியாயாதிக்கங்களை மீறுகின்ற செயல்:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

முன்னாள் விடுதலைப் போராளிகளே வாள் வெட்டுகளுக்கும் குற்றவியல் சார் சம்பவங்களுக்கும் பொறுப்பு என்று கூறுவது, ஜனாதிபதியின் வரப்பிற்குற்பட்ட நியாயாதிக்கங்களை மீறுகிற ஒரு செயற்பாடாகவே தாம் கருதுவதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,

தாயகப் பிரதேசங்களில் சமகாலத்தில் நிகழும் வன்முறைகள் மற்றும் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளின் போராளிகளை இணைத்து புனையப்படும் வியாக்கியானங்கள் குறித்த ஓர் சமூகப் புலனாய்வு பார்வையை செலுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத முனைவிற்குப் பின்னால் தாயகப் பிரதேசத்தில் எந்தவொரு ஆயுத நடவடிக்கையையும் புலிகள் நடத்தியிருக்காத அல்லது முனையாத ஓர் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னால் போராளிகள் மீதான இலங்கை அரசின் இந்தப் போக்கு பல கேள்விகளை முன்னிருத்தும் இடர்பாடு நிறைந்த மன உளைச்சல் ஒன்றிற்கு பல போராளிகளையும் அவர்தம் சார்ந்த அமைப்புக்களையும் தள்ளி விட்டிருக்கின்றது.

அனைத்து விதமான படைத்துறைக் கட்டுமானங்களையும் தன்னகத்தே கொண்டதொரு விடுதலைப் போராட்ட அமைப்பின் வலிந்த மற்றும் தற்காப்புப் படை நடவடிக்கைகள் மரபுவழி படைத்துறைசார் செயற்பாடுகளினூடு இற்றைக்கு ஒரு தசாப்தத்திற்கு முன் ஈழ விடுதலைப் புலிகள் பேணிய இரானுவச் சமநிலையை இல்லாதொழிக்க இலங்கையின் இரானுவ மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்கள் கொடுத்த விலை அளப்பரியது.

சிங்கள மேலாதிக்கத்தின் இந்தப் புலனாய்வு விஸ்தீரணம் முள்ளிவாய்க்களுடன் அதி உச்சம் பெற்றது போலவே அதன் விளைத்திறன் போக்கிலும் தொடர்ந்து வந்த சிங்களஅரசுகள் அதீத கவனம் செலுத்தின. குறிப்பாக உலக வல்லரசுகளோடும் தனது கற்றுக்கொண்ட பாடங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய பாரிய கடப்பாடொன்றிலும் அது சிக்கித் திளைத்தது.

தாயகப் பகுதியில் நிலைநாட்டப் பட்டிருக்கும் அதீத இரானுவப் பிரசன்னம், கட்டமைக்கப்பட்ட சர்வதேச புலனாய்வுப் பார்வை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நாடளாவிய பயங்கரவாத அறிக்கையின் அடிப்படையிலும் இலங்கையில விடுதலைப் புலிகள் இன்னுமொரு ஆயுத அல்லது பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியமில்லை என்ற அடிப்படையிலும் முன்னாள் விடுதலைப் போராளிகளே வாள் வெட்டுகளுக்கும் குற்றவியல் சார் சம்பவங்களுக்கும் பொறுப்பு என்று கூறுவது அடிப்படையில் ஓர் குதர்க்கமாகும்.

அடிப்படையில் புனர்வாழ்வழிக்கப் பட்டு இலங்கை ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சுமார் 12,000 ற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளது வாழ்வியல் மீது தாக்கம் செலுத்தும் இந்தச் சம்பவங்களானது இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதியின் ஆணைகள் அல்லது ஜனாதிபதியின் வரப்பிற்குற்பட்ட நியாயாதிக்கங்களை மீறுகிற ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

தாயகப் பரப்பில் ஜனநாயக நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகளை இலங்கையின் குற்றவியற் பொருற்கோடலுக்கு உற்படுத்துவதானது தாயகத்தை விட்டு புலம் பெயர வேண்டுமென்ற எண்ணற்பாட்டிற்கு பலரை தள்ளுவதற்கு வழியேற்படுத்தும் என்பதில் நாம் அசைக்க முடியாத கருத்துருவாக்கத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற சஞ்சலமும் எம்மில் பலருக்கு ஏற்படுத்தி விடக் கூடும் என்ற மனோநிலையில் நாம் உள்ளோம்.

அப்படியான ஒரு சூழ்நிலைவாதம் இலங்கையில் ஜனநாயக மரபுகளுக்கிடமில்லையென சர்வதேசத்தின் அரசுறவியல் பரப்புகளில் எதிரொலிப்பதை யாரும் தடுத்து முடியாது போகும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *