இலங்கை பிரதான செய்திகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் மூன்று சிறைக்கைதிகளின் வழக்கு: 3 தினங்கள் தொடர் விசாரணைக்காக செப்டம்பர் 25 ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஒத்திவைப்பு

அனுராதபுரம் சிறைச்சாலையில் 4 தினங்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை 3 தினங்களுக்குத் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்காக வவுனியா மேல் நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இவ்வாறு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்காடு என்ற இடத்தில் 18 கடற்படையினருக்கும், 8 இராணுவத்தினருக்கும் மரணம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஷன், கணேசன் தர்சன் ஆகிய மூன்று பேருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முதலில் சுலக்ஷன் மற்றும் தர்சன் ஆகிய இருவருக்கு எதிராக இந்த வழக்கில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி குற்றப்பகிர்வப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பின்னர், இந்த வழக்கின் முதலாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ள திருவருள்  என்பவருக்கு எதிராக இந்த வருடம் ஜுன் மாதம் 12 ஆம் திகதி சட்டமா அதிபரினால் குற்றப்பகிர்வுப் பத்திரம் இணைக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 4 வருடங்களாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை நடத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால், சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதனால், ந்த வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதற்காக ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த வழக்கைத் தவணையிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று 23 ஆம் திகதி புதன்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் எடுக்கப்பட்டிருந்தது.
அப்போது, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கூடாது எனக் கோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் 3 எதிரிகளும் நீதிமன்றத்தில் சிறைச்சாலை அதிகாரிகளின்hல் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது இந்த வழக்கில் முன்னிலையாகியிருந்த அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காகக் கால அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போது, இந்த வழக்கு தொடர்பில் தங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக் கூறிய எதிரிகள் மூவரும், கடந்த 4 வருடங்களாக இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கு விளக்கத்திற்கு எடுக்கப்படாத காரணத்தினால், தாங்கள் கடந்த 8 வருடம் 3 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த வழக்கு இந்த நீதிமன்றத்திலேயே நடைபெற வேண்டும் என தெரிவித்து, கடந்த 20 ஆம் திகதி முதல் தாங்கள் மூன்று பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகவும்; தெரிவித்தனர்.
இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் நடைபெறாவிட்டால், சாகும் வரையில் தாங்கள் மூவரும் தொடர்ந்து தமது உண்ணாவிரத்தை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார்கள்.
இதனையடுத்து. இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் மன்று வினவியபோது, இந்த எதிரிகள் மூவரும் கடந்த 20 ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் கூறியதைச் செவிமடுத்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்ததாவது:
இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களாக இந்த மன்றில் நடந்து வருகின்றது. இந்த வழக்கின் எதிரிகள் கிட்டத்தட்ட 8 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றார்கள்.
இப்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நான் பொறுப்பு கூற வேண்டியவனாக உள்ளேன்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளை அன்றாடம் விளக்கத்திற்கு எடுத்து, முடிவுறுத்துமாறு பிரதம நீதியரசரினால் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கை செப்டம்பர் மாதம் 25, 26. 27 ஆம் திகதிகளில் விசாரணைக்கு நியமித்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சாட்சிகளுக்கும் அழைப்பு விடுக்குமாறு மன்று உத்தரவிடுகின்றது என நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார்.
இதற்கமைய இந்த வழக்கு  செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *