இலங்கை பிரதான செய்திகள்

போதைப்பொருள் பரவலைத் தடுக்க விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்கு பொலிஸாரும் முப்படை புலனாய்வுப் பிரிவுகளும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக நேற்று (23)   ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வருவதற்கு எதிரான சட்டங்கள் எவ்வளவு தூரம் பலமாக இருந்தபோதும், நாட்டின் சில பிரதேசங்களில் போதைப்பொருள் பரவுவது அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார்.

இன்று ஒரு பாரிய சமூக சவாலாக மாறியுள்ள இந்த அழிவில் இருந்து இளைஞர் தலைமுறையை விடுவிப்பதற்கு சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டிற்குள் போதைப்பொருளைக் கொண்டு வருவதைத் தடுப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இந்த நடவடிக்கைகளில் வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொண்டு செயற்படுமாறும் குறிப்பிட்டார்.

பாடசாலைப் பிள்ளைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுப்பதற்கு எதிர்காலத்தில் விரிவான நிகிழ்ச்சித்திட்டங்களின் மூலம் நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறித்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் சாகல ரத்நாயக்க, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஜகத் பி விஜேவீர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *