இலங்கை பிரதான செய்திகள்

வடபகுதி மீனவர்களின் தேவைகள் தொடர்பில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் பேச்சு.


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே  இன்று (29.08.2017) பிற்பகல் மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவை அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்கள், கடற்றொழிலாளர் சமாசம் ஆகியன தொடர்சியாக ஆளுநரிடம் விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் முடிவில் பல விடயங்களுக்கு உடனடி தீர்வினை காண்பதற்கு மீன்பிடித்துறை அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

மண்டைதீவு, மூளாய், மாதகல், புங்குடுதீவு, தெல்லிப்பளை, ஆணைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களுக்கான படகுகளை நிறுத்துவதற்கான இறங்குதுறைகளை அமைத்தல். அதேபோன்று மீனவர்கள் தமது படகுகளின் இயந்திரங்களுக்கான எரிபொருட்களை பெற்றுக்கொள்ள வசதியாக ஒவ்வொரு இறங்குதுறைகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பதற்கு முன்பதாக உடனடியாக அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களை பவுசர்கள் மூலம் வழங்க நடமாடும் எரிபொருள் நிலையத்தினை ஏற்படுத்துமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அதனை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தினை மீனவர்களின் 200 படகுகள் நிறுத்தி வைக்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் கிராமக் குளம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் குருவில் குளம், இரணைமடு சாந்திபுரம் குளம், அழகாபுரி குளம், ஆகியன அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஆளுநர் மேற்கொள்ளும் முயற்சியினை வரவேற்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் மகிந்த அமரவீர எதிர்காலத்தில் வட பகுதி மீனவர்களின் மேலதிக தேவைகள் தொடர்பில் தெரிவிக்குமாறும் வேண்டுதல் விடுத்தார்.

சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதனை தடை செய்வதற்காக கடற்படைத்தளபதியுடன் தொலைபேசியில் உரையாடிய அமைச்சர் செயற்திட்டத்தினை உரிய முறையில் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *