இலங்கை பிரதான செய்திகள்

டெங்கு தொற்று காரணமாக வட்டக்கச்சி மாயவனூர் பகுதி அபாய வலயமாகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் 200 மீற்றர்கள் இடைவெளிக்குள் மூன்று டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளமையினால் குறித்த பிரதேசத்தை டெங்கு அபாய வலயமாக கருதி  நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளா் அலுவலகம் அறிவித்துள்ளது
டெங்கு தொற்றுக்குள்ளான மூவரில் இருவர் கொழும்புப் பிரதேசத்திலிருந்து காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சை பெற்ற அதேவேளை, அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவருக்கு டெங்கு நோய் தாக்கியுள்ளது.
எனவே டெங்கு நோய் காவும் நுளம்புகள் மேலும் பரவி அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன  எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளா் அலுவலகம்
அப்பகுதியில் காணப்படும் டெங்கு நோய்காவி நுளம்புகளை அழிப்பதற்காக விசேட புகையூட்டல் மேற்கொள்ளப்பட்டதுடன், வீதிநாடகம், மக்கள் அமைப்புகள் ஊடாக விழிப்புணர்வு, வீடுவீடாக சென்று நுளம்பு பெருகும் பொருட்களை இனங்கண்டு அகற்றுதல் ஆகிய செயற்பாடுகள் மூலம் டெங்கு பரப்பும் நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான செயற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விழிப்புணர்வு மற்றும் அபாயத் தவிர்ப்பு நடவடிக்கைகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவபீட மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றமை  எனவும்  கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளா் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இவ்வருடத்தில் இதுவரை 831 பொதுமக்கள் டெங்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களுள் 627 பேர் கிளிநொச்சி மாவட்டத்தை வதிவிடமாகக் கொண்டவர்கள். இவ் 627 பேரில் 203 பேருக்கு டெங்குத் தொற்று இருந்தமை குருதிமாதிரிப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. தெரைிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *