இந்தியா பிரதான செய்திகள்

அனிதா என்னுடைய மகள் – கமல்ஹாசன் – அனிதா தற்கொலை மிக துரதிர்ஷ்டமானது – ரஜினி


நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ‘கட்சி கடந்து மாநிலம் கடந்து அனிதாவுக்காக வெகுண்டெழ வேண்டும்’ என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அனிதா என்ன ஊர், என்ன பெயர் என்றெல்லாம் நான் பார்க்க விரும்பவில்லை. என் பெண்ணாக இருந்தால்தான் நான் கோபப்பட வேண்டுமா? கனவோடு வந்தவ அனிதாவை மண்ணோடு மண்ணாக அனுப்பிவிட்டோம் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் கட்சி கடந்து, மாநிலம் கடந்து, இந்த விஷயத்துக்காக வெகுண்டெழ வேண்டும். மக்கள் அனைவரும் அனிதாவுக்காக போராட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றங்கள் எல்லாம் நாம் அமைத்தது. அங்கேயெல்லாம் போய் நாம் தான் நன்றாக வாதாட வேண்டும். ஆனால், வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருந்தால் எப்படி மக்களால் வாழ முடியும் என்றும் கமல் குறிப்பிட்டார்.
இந்த மாதிரி தற்கொலைக்குப் பிறகுதான் பாடம் கற்பீர்களா? அப்படி ஒன்றும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாம். நாங்கள் உங்களுக்கு  பாடம் கற்றுக்கொடுக்கிறோம்’ என்றும் கமல் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை  நீட் பரீட்சைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, இன்று தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவி அனிதாவின் மரணத்திற்கு நடிகர் ரஜனிகாந்த்தும்  இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்திலே இரங்கலை வெளியிட்டுள்ளார்.அனிதாவின் தற்கொலை துரதிஸ்டவசமானது என்று கூறியுள்ள ரஜனிகாந்த் அவரது வேதனையை என் மனம் உணர்கின்றது என்றும் கூறியுள்ளார். தனது இதயத்தால் இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் மாணவி அனிதாவின் சோக மரணம் தொடர்பில் மத்திய அரசே குற்றவாளி  என  மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் நீட்தேர்வு திணிக்கப்பட்டதால்,  மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை இழந்த ஏராளமான எளிய குடும்பங்களுக்கு  இது மேலும் ஒரு துயரச் செய்தியாகும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *