இலங்கை பிரதான செய்திகள்

இருதரப்பு பொருளாதார திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படும் – ஜனாதிபதியிடம் சுஷ்மா சுவராஜ்

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் தொன்றுதொட்டு காணப்படும் வலுவான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு  இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என  இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெறவுள்ள 2வது இந்து சமுத்திர வலய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள அதன் உபதலைவியான இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று   ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த  போதே   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு நாடுகளின் மக்களின் நன்மைக்காகவும், முன்மொழியப்பட்டுள்ள புதிய இருதரப்பு பொருளாதார திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கு இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையே காணப்படும் விரிவான சுமுக உறவுகள் மற்றும் அந்நியோன்ய அரசியல் நிலைமைகள் காரணமாக எந்தவொரு பிரச்சினையையும் சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்பவதாகவும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதான பொருளாதார வளமாகக் காணப்படும் சமுத்திரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது ஜனாதிபதி       வலியுறுத்தியுள்ளார்;.

இந்து சமுத்திர வலயத்தில்  அமைந்துள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் மின்சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான முக்கிய போக்குவரத்து ஊடகமாக இந்து சமுத்திரம் விளங்குவதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி   அதனூடாக நாட்டு மக்களுக்கு நேரடித் தாக்கங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்து சமுத்திர வலய நாடுகளிலும், வலயத்திலும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு நேரடியாக தொடர்புபடுகிறது என்றும் ஜனாதிபதி   தெரிவித்தார்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *