இலங்கை பிரதான செய்திகள்

ஆயுதப்படையினர் மக்களின் காணிகளை பயன்படுத்த முடியாது, காணாமல் போனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும்:-

அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளரிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்:-

எதிர்க்கட்சித் தலைவர் திரு.இரா.சம்பந்தன்   தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளர் தூதுவர் அலிஸ் வெல்ஸ் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.  இச்சந்திப்பு ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர்    அதுல் கெசெப் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் நாட்டின் அரசியல் நிலைமைகள், குறிப்பாக அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் பற்றித் தூதுவருக்கு விளக்கமளித்தார்.  முரண்பாடுகளுக்கான பின்னணி பற்றி திரு.சம்பந்தன் அவர்கள் தெளிவுபடுத்துகையில், நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் தமிழ் ஆட்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு நாட்டில் எங்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.  இதன் காரணமாக 1.5 மில்லியன்களுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் நாட்டில் எஞ்சியுள்ள தமிழ் மக்களாவது உரிய கௌரவத்துடன் வாழவேண்டுமென்றும் புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிற்குத் திரும்பிவர வேண்டும் என்றும் நாம் விரும்புகின்றோம் என்றும் கூறினார்.

இலங்கையில் வாழுகின்ற சகல மக்களினதும் கௌரவத்தைக் காப்பாற்றுவதாகவும், பேணக்கூடியதாகவும் அமையக் கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை திரு.சம்பந்தன் அவர்கள் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களைப் போலல்லாது இம்முறை அரசியலமைப்பு உருவாக்குவதில் அதிகளவான ஆரம்பக்கட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச் செயற்பாடுகள் தோல்வியடைய இடமளிக்கப்படக் கூடாது.  அதிகாரப் பங்கீடு தொடர்பான ஒழுங்குகள் பற்றி திரு.சம்பந்தன் அவர்கள் கூறியபோது, இதயசுத்தியுடனான அதிகாரப் பங்கீடு இன்றியமையாதது என்றும், மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் இடங்களில்  தங்களது அன்றாட விடயங்களில் தாமே முடிவுகளை மேற்கொண்டு செயற்படக்கூடியதாக அவை அமைய வேண்டும் என்றும் கூறினார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களின் ஈடுபாடு எத்தகையதாக உள்ளதென்பதையிட்டு திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கையில், ‘சிங்கள மக்கள் மோசமானவர்கள் அல்ல, ஆனால், சில அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் புதிய அரசியலமைப்பு மூலம் நாடு துண்டாடப்படப் போகின்றதென்ற பயத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர் என்றார்.  நாங்கள் நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை.  ஆனால், நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தாங்கள் இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள் என்றும், இந்த நாடு தங்கள் எல்லோருக்கும் சொந்தமானதென்றும் உணரக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்றும் கூறினார்.  மேலும், அவர் கூறுகையில், இந்த நாட்டில் இதுவரை காலமும் ஒவ்வொருவரும் கணிக்கப்பட்டதைப் போல இனிமேலும் நாங்கள் கணிக்கப்படக் கூடாது என்றும், இந்த நாட்டில் வாழுகின்ற சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களையும் சமமானவர்களாகவும் கௌரவமானவர்களாகவும் நாம் கணித்துச் செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது, உயர்ந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், இந்த நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து செயற்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும், புதிய அரசியலமைப்புக்குப் பல்வேறு கட்சிகளினதும் ஒப்புதலைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதெனவும், அதனால் பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மை ஆதரவைப் பெற்று பின்னர் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றினூடாக நாட்டு மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த திரு.சுமந்திரன் அவர்கள், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதனால் தாங்கள் தோற்றுப்போனவர்களாகக் கருதுபவர்களே இனவாத சிந்தனைகளைத் தூண்டுபவர்களாகச் செயற்படுகின்றனர் என்று கூறினார்.  அத்துடன், அரசியலமைப்பு மறுசீரமைப்புத் தொடர்பாக நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையின்படி நாடளாவிய ரீதியில் புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை என்று மக்கள் கருதுவதாகக் குறிப்பிட்டார்.

இது, இனிமேலும் இனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்லவென்றும், இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடிய அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும் என்பதை திரு.சம்பந்தன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.  எல்லா மாகாணங்களிலும் உள்ள முதலமைச்சர்கள் தமது மாகாணங்களுடன் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்குத் தமக்கு மேலும் அதிகாரங்கள் வேண்டுமெனத் தெரிவித்திருப்பதாகவும் நாம் அறிகின்றோம் என்றும் கூறினார்.

ஆயுதப் படையினர் தங்கியிருக்கும் தனியார் காணிகள் விடுவித்தல் தொடர்பாக திரு.சம்பந்தன் அவர்கள் கூறுகையில், இக் காணிகள் விடுவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்குக் கையளிக்கப்பட வேண்டும் என்றும், அக்காணிகளுக்குத் திரும்பி வருவதற்கு அவர்கள் உரிமையுடையவர்கள் என்றும், மக்கள் தமது காணிகளைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் இவ்வேளையில் ஆயுதப்படையினர் இக் காணிகளில் தங்கியிருந்து அதனைத் தமது உபயோகத்துக்குப் பயன்படுத்த முடியாது எனவும் கூறினார்.  மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகக் கவனம் செலுத்தப்பட்டு, நம்பத்தகுந்த விசாரணைகள் மூலம் உண்மைகள் அறியப்பட்டுக் காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஏதாவது வகையில் மன ஆறுதல் அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.


கொடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தபோதும் அச்சட்டம் இன்னும் மாற்றியமைக்கப்படவில்லையென்பதையும் திரு.சம்பந்தன் அவர்கள் தூதுவர் அலிஸ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.  இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் நியாயமற்ற வகையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

தூதுவர் அலிஸ் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவுக்கும் தலைவருக்கும் நன்றி கூறியதோடு, ‘கொள்கையில் உறுதிப்பாடுடைய ஒரு தலைவரைச் சந்திக்கக் கிடைத்தமையையிட்டு தாம் பெருமையடைவதாகவும் கூறியதோடு, கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடனான அதன் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிவரும் எனவும் உறுதியளித்தார்.

திரு.சம்பந்தன் அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.அடைக்கலநாதன், திரு.சித்தார்த்தன் மற்றும் திரு.சுமந்திரன் அவர்கள் இச்சந்திப்பில் பங்குபற்றியதோடு, தூதுவர் அலிஸ் அவர்களுடன் இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் மேன்மைதங்கிய அதுல் கெசப் அவர்களும் தூதுவராலய உத்தியோகத்தர்கள் சிலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *