இலங்கை உலகம் பிரதான செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வினால் வன்னேரிக்குளம் பாதிப்படைகிறது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வின் காரணமாகவே குளத்தின் நீர் வேகமாக வற்றுவதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

1953ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வன்னேரிக்குளம் குடியேற்றத் திட்டதில்  கிராமத்தின் உயிர்நாடியாக   காணப்படுகின்றது. முழுமையாக விவசாயத்தினை நம்பியுள்ள இக்கிராமத்தில் 363 ஏக்கரில் ஆண்டுதோறும் பெரும்போக பயிர்ச் செய்கை இடம் பெற்று வருகின்றது.

முல்லைத்தீவின் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளத்தின் வான் வெள்ளம் இக்குளத்தினை நிரப்பும். வன்னேரிக்குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் மண்டைக்கல்லாறு வழியாக பூநகரிக் கடலில் கலக்கின்றது.
வன்னேரிக்குளத்தினையும் தேவன்குளத்தினையும் இணைத்து உருவாக்கப்பட உள்ள பெரும் நீர்த் தேக்கத்தின் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும். வயல் காணி பகிர்ந்தளிக்கப்படாமல் தவிக்கும் ஜெயபுரம் கிராம மக்களுக்கும் உவர்ப் பரம்பலினால் வயல் நிலங்களை இழந்துள்ள வன்னேரிக்குள குஞ்சுக்குள கிராம மக்களுக்கும் வயல் நிலம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

இந்நிலையில் பல திட்டங்களை உள்ளடக்கி அவற்றைச் செயற்படுத்த வேண்டிய முயற்சியில் கிளிநொச்சி நீர்ப்பாசனம் திணைக்களம் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த ஏழாண்டுகளாக வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் பெருமளவில் மணல் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக குளத்தின் நீர் வேகமாக வற்றுவதாக இக்கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னேரிக்குளத்தில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுடன் கிராமத்தில்  மாவட்டத்தில் பல  அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக நடைபெற்ற சிறுபோக கூட்டத்திலும் வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினை கிராமத்தின் பொது அமைப்புகள் சரியான தகவல்களை வழங்கி தடுக்காவிட்டால் எதிர்கால விவசாய நடவடிக்கைகள் பெரும் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் என நீர்ப்பாசனப் பொறியியலாளரினால் எச்சரிக்கைப்பட்ட நிலையிலும் குளத்தின் பின்பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுகின்றது. இதனைத் தடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தின் வளர்ச்சியில் ஆர்வங்கொண்டவர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply