இலங்கை பிரதான செய்திகள்

யாழ் கோட்டையில் படையினர் நிலை கொள்வதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கப்படக் கூடாது – டக்ளஸ்

வரலாற்று ரீதியில் தொன்மைமிக்க புராதனச் சின்னமாக விளங்கும் யாழ் கோட்டையை படையினர் நிலை கொள்வதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கப்படக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா   தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரது இருப்புகள் அமைந்துள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்பவே  அமைந்திருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி படைகள் நிலைகொண்டிருக்கக்கூடிய காணி, நிலங்கள் கடற்றொழில், விவசாயச் செய்கைகள் போன்ற எமது மக்களின் வாழ்வாதாரங்களுடன் தொடர்புடைய வளங்களைக் கொண்ட பொருளாதார ரீதியில் முக்கியத்துவமான காணி, நிலங்களாக இருக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் கோட்டை என்பது எமது பகுதியில் இருக்கக்கூடிய புராதன வரலாற்று அடையாளங்களுள் ஒன்றாகும். அந்த வகையில் கடந்த கால அசாதாரணச் சூழ்நிலைகளின்போது பாரிய சேதங்களுக்கு உட்பட்டிருந்த மேற்படி கோட்டையையும், அதனது சுற்றுப் புறங்களையும் மீளப் புனரமைப்புச் செய்வதற்கு கடந்த காலங்களில்   முயற்சிகளை மேற்கொண்டு, போதியளவில் அதனை நிறைவேற்றியும் வந்துள்ளோம்.

மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளில் இன்னும் எஞ்சியிருக்கின்ற பணிகளை மேற்கொள்வது தொடர்பில் நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களது அவதானத்திற்கும் கொண்டு வந்து, தற்போது அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழுலில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருகின்ற ஓர் இடமாகவும் யாழ் கோட்டை விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  இத்தகையதொரு நிலையில், அதனை மீள படைகளின் தேவைகளுக்காக வழங்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *