இலங்கை பிரதான செய்திகள்

சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் சட்டத்தைக் கையிலெடுப்பதா?

suresh

கடந்த வியாழக்கிழமை (20.10.2016) அன்று இரவு, கொக்குவில் சந்தியை அண்மித்த காங்கேசன்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால்; சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் ஒருவர் சூட்டுக் காயங்களுடனும் மற்றவர் சூட்டுச் சம்பவத்தினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாகவும் உயிரிழந்துள்ளார்கள். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அவசரகாலச்சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில், சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? அல்லது சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிசார் கடமையாற்றுகின்றனரா? என்ற கேள்வியை பல்கலைக்கழக மாணவர்களின் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது கேட்டுநிற்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்வேறுபட்ட தேவைகள் இருக்கலாம். இரவில் தமது இருப்பிடத்திற்குச் சென்றடைவதற்கு அவர்கள் மிகவும் விரைவாகவும் சென்றிருக்கலாம். இருட்டில் மறைந்துநின்று திடீரென மோட்டார் சைக்கிள்களை நிறுத்த மறிக்கின்றபோது உடனடியாக நிறுத்தக்கூடிய விடயமும் அல்ல. அது மட்டுமன்றி, அவ்வாறாக யாராவது தப்பித்துச் செல்வதாக இருந்தால், அவர்களைத் தொடர்ந்து சென்று கைதுசெய்வதற்கான வழிமுறைகளும் பொலிசாரிடம் இருக்கின்றது. அல்லது வேறுவழிகளைப் பின்பற்றியிருக்கலாம்.

மேலும், இந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் கூட அது நிறைவேற்றப்படாமல் நீண்டநாட்களாக சிறைத்தண்டையைத்தான் அனுபவித்து வருகின்றனர். இந்தப் பின்னணியில் இரண்டு அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் என்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்படவேண்டியதும் ஆகும். சம்பந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்பொழுது நெஞ்சிலே குண்டடிபட்டுத்தான் அந்த மாணவன் இறந்திருப்பதாக அவரது பெற்றோரும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், மாணவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிப்போயிருக்கக் கூடுமாக இருந்தால், துப்பாக்கிக் குண்டுகள் முதுகில் துளைத்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருப்பதானது அவர்கள் வருகின்றபொழுது எதிரில் நின்று துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இந்த நிலையில் இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. அவ்வாறு நடந்திருக்குமாயின், யாழ்ப்பாணத்தைக் கலவரபூமியாக்க பொலிசாரின் பின்னணியில் யாராவது இயங்குகின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏற்கனவே இராணுவ ஆக்கிரமிப்புக்குள் அச்சத்தின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்களானது, மேலும் மேலும் அச்சத்திற்குள்ளாக்கும் நிகழ்ச்சியாகவும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, வெற்றியடைந்த ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து உருவான நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற இந்த அரசாங்கமும இவ்வாறான செயற்பாடுகளினூடாக தீட்டிய மரத்தில் பதம் பார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அண்மைக்காலத்தில்தான் மக்கள் சுயமாக தமது கோரிக்கைகளுக்கான குரலை வெளிக்காட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது பொலிசாரின் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்களானது பொலிசார்மீதும், சட்டம்-ஒழுங்கின்மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவது என்பது மிகமிகக் கடினமான ஒரு செயலாகும். பல இலட்சம் மாணவர்களுடன் போட்டியிட்டு, சில ஆயிரம் மாணவர்களே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்றனர். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பப் பின்னணயிலிருந்து வந்திருக்கும் இந்த மாணவர்களின் இறப்பு என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடியதொன்றல்ல. தமது பெற்றோரை, சகோதர சகோதரியை எதிர்காலத்தில் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்புக்களைக் கொண்ட இவர்களது இழப்பை ஈடு செய்ய முடியாது.

இந்த நிலையில், ஒன்று இத்தகைய துப்பாக்கிப் பிரயோகம் ஏன்? எதற்காக? எந்தப் பின்னணியில் நடத்தப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படவேண்டும் என்பதுடன், பலியாகிப்போன மாணவர்களின் குடும்பத்தவருக்கு ஒரு முழுமையான நட்டஈடும் செலுத்தப்படவேண்டும். அது மட்டுமன்றி, எதிரகாலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது என்பதையும் அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் பிரிவால் வாடும் பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும், உடன் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், இவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சுரேஷ். க.பிரேமச்சந்திரன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *