இலங்கை பிரதான செய்திகள்

அளவெட்டி வாள்வெட்டு வழக்கு – குழுத் தலைவன் கனியின் மேன் முறையீட்டு மனு தள்ளுபடி

elan
அளவெட்டி வாள்வெட்டு குழுத் தலைவன் கனியின் மேன் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ள யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இந்த வழக்கில் மல்லாகம் நீpதிமன்றம் அவருக்கு வழங்கிய சிறைத் தண்டனை தீர்ப்பு சரியானது உறுதிப்படுத்தியுள்ளது.  அளவெட்டியில் நடைபெற்ற வாள்வெட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனி என்றழைக்கப்படுகின்ற வாள்வெட்டு குழுவின் தலைவனுக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் 08.02.2016 ஆம் திகதி 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன், காயமடைந்த நபருக்கு ஒரு லட்ச ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் எனவும் செலுத்தத் தவறினால். ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதவான் தீர்ப்பளித்தார். இதனையடுத்து, அன்றைய தினமே குற்றவாளி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்தக் குற்றவாளி யாழ் மேல் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார். மேன் முறையீட்டு மனு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு, கடந்த 19.10.2016 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில்; தெரிவித்துள்ளதாவது:
இந்த சம்பவத்தில் காயமடைந்தவரை அளவெட்டி வாள்வெட்டு குழுவின் தலைவனாகிய கனியே வெட்டினார் எனவும், அந்த கனி என்பவரே எதிரி கூண்டில் நிற்கின்றார் எனவும் காயமடைந்தவர் உள்ளிட்ட மற்றைய சாட்சிகள் குற்றவாளியை அடையாளம் காட்டி சாட்சியமளித்துள்ளதை மல்லாகம் மாவட்ட நீதவான் தனது தீர்ப்பில் விசேடமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தீர்ப்பில் எதுவிதமான பிழையுமில்லை. இந்த வழக்கின் மேன்முறையீட்டாளரைக் குற்றவாளி என மல்லாகம் மாவட்ட நீதவான் தீர்ப்பளித்திருப்பது சரியானது. வாள்வெட்டுக்கள் யாழ் குடாநாட்டு மக்களை அச்சுறுத்தும் குற்றமாக இருந்து வருகின்றது. வாள்வெட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கவீனர்களாக ஆக்கப்படும் சூழல் உருவாக்கப்படுகின்றது.
வாளினால் வெட்டி ஒருவருக்குக் கடும் காயம் ஏற்படுத்திய இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் அளவெட்டி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இந்த வழக்கின் எதிரி கனி என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கனி என்ற வாள்வெட்டு குழு அப்பிரதேசத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபட்டு வந்துள்ளது.  இத்தகைய குற்றச் செயல்களுக்கு நீதிமன்ற தீர்ப்புக்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்தகைய குற்றச் செயல்களுக்கு சட்டப்புத்தகத்தில் உள்ள அதிகூடீய தண்டனையை வழங்குவதே சரியானதாகும். இந்த வழக்கில் மல்லாகம் நீதவானினால் எதிரிக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு லட்சம் ரூபா நட்டயீட்டுத் தீர்ப்பும் சரியான தண்டனை தீர்ப்பு என இந்த நீதிமன்றம் கண்டு, இந்த மேன் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கின்றது என்றார்
இந்தத் தண்டனை தீர்ப்பானது மல்லாகம் மாவட்ட நீதிவானினால் தீர்ப்பளிக்கப்பட்ட தினமாகிய 08.02.2016 ஆம் திகதி முதல் சிறைத் தண்டனை காலத்தை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும் என மல்லாகம் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் சட்டமா அதிபர் தரப்பில் அரச சட்டவாதி நாகரட்னம் நிசாந்தன முன்னிலையாகியிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *