இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் நேபாள பிரதமர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு:-

சார்க் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  அர்ப்பணிப்பு சிறப்பானதெனவும் அது தொடர்பில் அனைத்து சார்க் நாடுகளினதும் நன்றியை அவருக்கு தெரிவிப்பதாகவும் நேபாளப் பிரதமர் Sher Bahadur Deuba  தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன வுக்கும், நேபாளப் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று (21) இரவு இடம்பெற்ற போதே நேபாளப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெற்காசிய செயற்பாடுகள் தொடர்பில் இணைந்து செயற்படுவதற்காகவென பொது அமைப்பான சார்க் அமைப்பின் செயற்பாடுகளை தொடர்சியாக முரண்பாடுகளின்றி முன்னெடுக்க வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், சார்க் அமைப்பின் செயற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பில் தாம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை சந்தித்த போதும் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள இருதரப்பு உறவுகளை அனைத்து துறைகளிலும் மேலும் மேம்படுத்ததுதல் தொடர்பிலும் தலைவர்கள் இதன்போது கவனம் செலுத்தியதுடன் இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார, வர்த்தக, சமய மற்றும் பண்பாட்டு உறவுகளை புதிய அணுகுமுறை ஊடாக முன்னெடுப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடினர்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பௌத்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நேபாள ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடியதை நினைவூட்டிய ஜனாதிபதி அவர்கள், அதன்போது நேபாள ஜனாதிபதி அவர்கள் விடுத்த உத்தியோகபூர்வ அழைப்புக்கமைய தான் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நேபாளத்திற்கு செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்ட நேபாளப் பிரதமர், மனித உரிமைகள் செயற்பாடுகளிலும் நேபாளம் எப்போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கவலை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நட்பு நாடென்ற ரீதியில் அவ்வேளையில் நேபாளத்திற்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.

நெருக்கடி நிலையில் உண்மை நண்பராக இலங்கை நேபாளத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்த நேபாளப் பிரதமர், சார்க் பிராந்தியத்திலுள்ள இரண்டு நாடுகள் என்ற வகையிலும், மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட இரு நட்பு நாடுகள் என்ற வகையிலும் இந்த சந்திப்பு தொடர்பில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *