இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐ.நா மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கு ஜனாதிபதி அழைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தின் ஊடாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்பதாக அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி, சயிட் அல் ஹூசெய்னை சந்தித்திருந்தார். தொழில் சட்டங்கள் உள்ளிட்ட விடயங்களில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்கப்பட வேண்டியது என ஹூசெய்ன் கூறியுள்ளார்.

அதேவேளை  இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் அதன் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாகவும்,   ஷெயிட் அல் ஹுசைனிடம் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆணையாளருக்கு விளக்கிய ஜனாதிபதி  , இந்த அனைத்து நடவடிக்கைகளை, நாட்டின் உள்ளக அரசியல் நிலவரங்களையும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளையும் கருத்திற்கொண்டே முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இந்த விஜயத்திற்கு முன்னர் தான் கையொப்பமிட்டதாகவும், அதன் நடவடிக்கைகள் செயற்திறனாக முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி  , புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தேச வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள கிழக்கு மாகாணத்தின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட  ஜனாதிபதி அவர்கள், வடக்கில் உள்ள காணிகளில் குறிப்பிடத்தக்களவு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவை நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முறையாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அவசரப்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கடும்போக்காளர்களே இலாபமடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி  , மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமைப்படுத்துவதற்கு இரண்டு வருட காலம் தமது நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஆணையாளருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *