இந்தியா பிரதான செய்திகள்

ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

paneer
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகள் நியமனம், காவிரி விவகாரம், காவிரி தொழில்நுட்பக்குழுவின் ஆய்வறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் முக்கிய துறைகளின் செயலர்கள் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு நிர்வாகம் தொடர்பாக திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். அரசுப் பணிகளை கவனிக்க பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என தெரிவித்தார். முதல்வரின் பொறுப்புகளை ஓ.பன்னீர் செல்வம் ஏற்ற பிறகு அவரது தலைமையில் முதல்முறை யாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த 18-ம் தேதி நடந்தது.

இதற்கிடையில், மத்திய எரிசக்தித்துறையின் உதய் திட்டத்தில், தமிழக மின்துணை தற்போது இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை, தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி டெல்லியில் சந்தித்து, தமிழக தரப்பு கோரிக்கைகளை விளக்கியுள்ளார். இது தவிர, காவரியில் அடுத்த கட்ட நடவடிக்கை, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக தமிழக அமைச்சரவை திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது.

நாளை மாலை 5 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடி, உதய், காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க உள்ளதாகவும், தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *