இலங்கை பிரதான செய்திகள்

வித்தியா வழக்கு – சுவிற்சலாந்தின் கௌரவத்தையும் அங்குள்ள இலங்கையரின் மதிப்பையும் பாதித்துள்ளது – நீதிபதி இளஞ்செழியன்

.சுவிற்சலாந்தில் திட்டமிடப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலைக்கான சதித்திட்டத்தினால் அந்த நாட்டிக் கௌரவத்திற்கும், அங்கு வாழும் இலங்கையர்களின் மதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த வழக்கின் ட்ரையல் எட் பார் நீதிபதிகளில் ஒருவராகிய நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு வனபுனர்வின் பின்னர் கோரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி நடைபெற்றது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளின் பின்னர், யாழ் மேல் நீதிமன்ற சமாதான அறையில் ட்ரையல் எட் பார் விசாரணை முறையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த நான்கு மாதங்களாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது,
விசாரணை முடிவில் பாடசாலை மாணவி வித்தியாவைக் கடத்தி வன்புனர்ந்து கொன்றதாக 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 7 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 பேர் கொண்ட ட்ரையல் எட் பார் நீதிபதிகள் குழாம் ஏகமனதாக எதிரிகள் ஏழு பேரை குற்றவாளிகளாகக் கண்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது,
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிபதிகள் குழாமின் தலைவராகிய நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது 332 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். இவருடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் தெரிவித்தார். இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை, தானும் ஏற்றுக் கொள்வதாகக் கூறிய நீதிபதி இளஞ்செழியன் தன்னுடைய தனி தீர்ப்பாகிய 343 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வழங்குவதாகக் கூறி தீர்ப்பளித்தார்.
அந்தத் தீரப்பில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:
வித்தியாவை   கூட்டுப்பாலியல் வல்லுறவு புரிந்து மிக மோசமாகவும், கொடூரமாகவும் மனித நாகரிகமில்லாத காட்டு மிராண்டித்தனமாக அந்த சின்னஞ்சிறிய பூவை கொடூரமாகக் கொலை செய்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாலியல் வீடியோ சந்தை விவகாரம்
ஒரு மாணவ சிறுமியை மிகக் கேவலமாக வெறி பிடித்த மிருகங்களைப் போன்று இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது. பெண் இனத்திற்கே சவால் விடும் வகையில் அவருடைய இரு கைகளையும் தலையின்பின்னால் கட்டி இரண்டு கால்களை 180 பாகையில் விரித்து அலரி மரத்தில்கட்டி கொலை எண்ணத்தின் கொடூரத்தனத்தை வகையில் கொலை செய்துள்ளமை வழக்கு விசாரணையில் எண்பிக்கப்பட்டுள்ளது.  இந்த மாணவி கொலை வழக்கானது, மற்றைய வழக்குகளிலும் சற்று வித்தியாசமானது.  இந்த கொலைக்கான சதித்திட்டத்தில் சர்வதேச பாலியல் வீடியோ சந்தை விவகாரம் இருப்பது எண்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவ சிறுமி 4 பேரினால் மிகக் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட விதத்தினை அவதானிக்கும்போது, மனித நேயமில்லாத பெண்களுடன் பிறக்காத தாயை மனைவியை சகோதரியை பெண்ணாக மதிக்காத நபர்களால் செய்யப்பட்ட செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
அந்தப் பச்சை பாலகியான சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள விதமானது, பெண் இனத்தின் மானத்தை விலைபேசுகின்ற, பெண்ணினத்தை அவமானப்படுத்துகின்ற, மாணவிகள் சமுதாயத்தையும் அதன் கல்விகற்கும் நிலையையும் அச்சுறுத்துகின்ற சக்திகளின் செயற்பாடு என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது.
கொடூரமான கொலை கடூரமான தண்டனை
காட்டுமிராண்டித் தனமான மனித பண்பாட்டு நாகரிகமில்லாத ஈவிரக்கமற்ற செயற்பாட்டின் ஒரு சமூக அவலத்தையே மாணவி வித்தியாவின் சடலம் கிடந்த காட்சி புலப்படுத்தியிருக்கின்றது.
இனி வரும் காலங்களில், ஒருவன் ஒரு பெண்ணின் மீது, விசேடமாக ஒரு மாணவி மீது இத்தகைய குற்றச்செயல் புரிந்தால் அதற்கு, இதுதான் தண்டனை என, மனதில் கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கின் தண்டனை அமைய வேண்டும். சர்வதேசமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த வழக்கின் நீதித் தண்டனை அமைய வேண்டும். இந்த வழக்கில் வழங்கப்படுகின்ற தண்டனைத் தீர்ப்பு நாளைய சரித்திரத்தைப் புரட்டிப் போடுவதாக அமைய வேண்டும். எனவே, இந்த கொடூரமான கொலைக்கு கடூரமான தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என்று கருதுகிறேன்.
.இந்த வழக்கின் சதித்திட்டம் சுவிற்சலாந்து நாட்டில் திட்டமிடப்பட்டதாக வழக்கு விசாரணையில் தகவல் முன் வைக்கப்பட்டது. சுவிற்சலாந்து நாடு இரண்டு உலகப் போரின்போதும் நடு நிலைமை வகித்த ஒரு நாடாகும். ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை ஜெனிவாவில் அந்த நாடு கொண்டிருக்கின்றது. அந்த வகையில், இந்த வழக்கின் விடயங்கள் சுவிற்சலாந்து நாட்டின் கௌரவத்தை பாதிப்படையச் செய்துள்ளது. அதிலும் முக்கியமாக அங்கு வாழும் இலங்கையர்களின் மதிப்பையும் கௌரவத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது எனவே, சர்வதேச ரீதியாகக் கவனத்தைத் திருப்பிய இந்தக்குற்றச் செயலுக்கு சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தனது தனி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 3 நீதிபதிகளினதும் ஏகமனதான தீர்ப்பின் அடிப்படையில் 7 எதிரிகளுக்கு மரண தண்டனையும் மேலும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்டவராகிய வித்தியாவின் தாயாருக்கு 70 லட்சம் நட்டயீடாகவும் அரச தண்டப்பணமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் குற்றவாளிகள் செலுத்த வேண்டும் என 3 நீதிபதிகள் குழாம் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்ட 9 பேரில் 7 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டதுடன்,
3 நீதிபதிகளும் ஏனைய 2 பேரையும் சுற்றவாளிகள் என ஏனமளதானத் தீரப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *