இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு இந்த மாத இறுதியில் இரண்டாயிரம் காணிஉறுதிகள்


பெருந்தோட்டப் பகுதிகளில் தனிவீடுகள் அமைக்கப்பட்டும் இதுவரைகாலமும் காணியுறுதிகள் வழங்கப்படாதிருக்கின்றமை தொடர்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தமது கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து தனது அமைச்சின் கீழ் இங்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக அவர்களுக்கு காணியுறுதியினைப் பெற்றுக்கொடுக்கவுள்ளோம். முதற்கட்டடமாக இரண்டாயிரம் காணி உறுதிகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது என காணி அபிருத்தி மற்றும் பாராளுமன்ற  விவாகாரங்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்டம் பென்தொட்ட தோட்டத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய திறப்புவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் துறை அமைச்சர் சந்ராணி பண்டார தலைமையில் இடம்பெற்ற இவ்விழாயில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கருணாதிலக்க கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சர் திகாம்பரத்தின் தலைமையில் பெருந்தோட்டப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார். பெருந்தோட்டப் பகுதிகளில் தனிவீடுகள் அமைக்கப்பட்டபோதும் அந்த வீடுகள் அமையப்பெறும் காணிகளுக்கு இதுவரை முழுமையான காணி உறுதி வழங்கப்பட்டிருக்கவில்லை. திகாம்பரத்தின் வேண்டுகோளின் பேரில் நாங்கள் நாடாளுமன்றில் ஒன்று கூடி பேசி இது தொடர்பில் நிலவக்கூடிய சிக்கல்களை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்துகொண்டுள்ளோம்.

பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனது அமைச்சுக்கு கீழ் இயங்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழு காணி உறுதி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.

முதற்கட்டமாக இரண்டாயிரம் காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்க நாம் ஆவணங்களை தயார் செய்து வருகின்றோம். அந்தப் பணிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் மேற்கொண்டு வருகிறார். விரைவில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இரண்டாயிரம் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெறவள்ளது என்று தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *