இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சொற்களில் சூட்சுமம் – பி.மாணிக்கவாசகம்:-

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியானது சொற்களில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சியே இத்தகைய சிக்கலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

பிச்சினைகளுககுத் தீர்வு காண்பதில் உளப்பூர்வமான ஈடுபாடும், உண்மையான அக்கறையும் கொண்டிருந்தல் அவசியமாகும். ஆனால் தற்போதைய முயற்சிகளில் இந்தப் பண்புகள் இருக்கின்றனவா என்பது கேள்வி குறியாகியிருக்கின்றது.

மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை மிகுந்த நம்பிக்கையோடும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனுமே தேர்தல் மூலமாகத் தெரிவு செய்கின்றார்கள். தமது நம்பிக்கையையும், எதிர்பார்ப்பகளையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆனால் மக்களுடைய இந்த ஆர்வத்தை அரசியல்வாதிகளும், அரசியல் தலைவர்களும் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செயற்படுகின்றார்கள் என்பதும் கேள்வி குறியாகியிருக்கின்றது.

மக்கள் அனைவரும் ஒற்றுடையாக இருக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகள். அரசியல் தலைவர்களுக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால், அரசியல்வாதிகளும், அரசியல் தலைவர்களும் தங்களுக்குள் ஒற்றுமையாக இருப்பதில்லை. அவர்கள் மக்களுக்கு விசுவாசமாகவும் இருப்பதில்லை என்பது யுத்தத்திற்குப் பின்னரான அரசியல் கள நிலைமையாகக் காணப்படுகின்றது,

மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பவற்றை அரசியல்வாதிகளும், அரசியல் தலைவர்களும் கைக்கொள்ளாததன் காரணமாக மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழக்க நேரிட்டிருக்கின்றது. யுத்தத்தி;ன போது எத்தனையோ பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்திருந்தார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, அந்தப் பிரச்சினைகள் பல முடிவுக்கு வந்துள்ள போதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சரியான சூழல் இன்னும் உருவாக்கப்படவில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து செயற்படக் கூடியதாகவும் இல்லை என்றே கூறவேண்டியிருக்கின்றது.

இத்தகைய ஒரு நிலைமையையே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காண்பதற்கு வழி வகுக்கும் என நம்பிக்கையூட்டப்பட்ட, புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற விடயத்திலும் ஏற்பட்டிருக்கின்றது.

புதிய அரசியலமைப்பு

இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதற்காகவே நாங்கள் அதற்கு ஆதரவை வழங்குகின்றோம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். அதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது என்றும் கூறப்பட்டது.

புதிய அரசியலமைப்பானது மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவது, நடைமுறையில் உள்ள விகிதாரசார தேர்தல் முறையை மாற்றி அமைப்பது, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது என்ற மூன்று விடயங்களுக்காகவுமே புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியிருக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மூன்று விடயங்களையும் நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய முயற்சிக்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

இந்த மூன்று விடயங்களில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருக்கின்றது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கான சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையான விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்பட்டு, வட்டார முறையிலான தேர்தல் முறை விகிதாசார தேர்தல் முறை என்ற இரண்டும் கலநதததொரு தேர்தல் முறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது, ஆனால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் இன்னும் எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை.

புதிய அரசியலமைப்புக்கான அடிப்படை விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணத்தக்க வகையிலான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

‘ஏக்கிய ராஜ்ஜிய’வும் ‘ஒருமித்த நாடு’ம்

நாட்டில் நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி முறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட முடியாது என்பது தமிழர் தர்பபின் நிலைப்பாடாகும். ஏனெனில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதிலேயே மையம் கொண்டிருக்கின்றது. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு அவசியமான அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியாது என்பது தமிழர் தரப்பின் வலுவான வாதமாகும்.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கமும், சிங்களத் தரப்பினரும் தயாராக இல்லை. இந்த ஆட்சி முறையின் கீழ் அதிகாரங்களைப் பரவாலக்க முடியும் என்பதே அவர்களுடைய நிலைப்பாடாகும். பரவலாக்கப்படுகின்ற அதிகாரங்கள் எந்த நேரத்திலும் மத்திய அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படைத் தன்மையைக் கொண்டது.

சுயநிர்யண உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையைக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறைiயை உள்ளடக்கியதோர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமி;ழர் தரப்பின் எதிர்பார்ப்பாகும். சமஸ்டி ஆட்சி முறையென்பது ஒற்றையாட்சியில் சாத்தியமாகாது. ஆகவேதான் ஒற்iயாட்சி முறையை மாற்றியமைக்கத்தக்க வகையிலான புதியதோர் அரசியலமைப்பை உருவாக்கி அதன் மூலமாக இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பதே பொருத்தப்பாடான முயற்சியாக இருக்கும் என்பதும் தமிழர் தரப்பின் நிலைப்பாடாகும்.

ஆனால் இந்த அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா என்பது சந்தேகமாக இருக்கின்றது. ஒற்றையாட்சியைக் குறிக்கின்ற எக்கிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லைக் கொண்ட ஆட்சி முறையே அமைந்திருக்கும் என்று இடைக்கால அறிக்கை கூறுகின்றது. ஏக்கிய ராஜ்ஜிய என்பதற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ்ப்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்பட முடியாத நாடு என்பதாகும். பிரிக்கப்பட முடியாத ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற ஒரு தீர்வை நோக்கியதே புதிய அரசியலமைப்பு என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் விளக்கமளிக்கின்றனர்.

ஆனால், ஏக்கிய ராஜ்ஜிய என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசயலமைப்பின்படி, ஒற்றை முறைமையைக் கொண்டதாகும் என்பது சட்டத்துறை சார்ந்தவர்களின் விளக்கமாகும். ஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒற்றையாட்சியைக் குறிப்பது. ஒருமித்த நாடு என்பது பிராந்தியங்களின் கூட்டு அரசியல் முறையைக் குறிக்கின்றது என்று அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

எனவே, ஒற்iறாயாட்சியின் கீழ் சாத்தியப்படாத சமஸ்டி ஆட்சி முறைமை முறையான அதிகாரப் பகிர்வு என்பது, ஏக்கிய ராஜ்ஜிய (ஒற்றையாட்சி) – ஒருமித்த நாடு (பிராந்தியங்களின் கூட்டு) என்ற முரண்பாடான நிலையில் எவ்வாறு சாத்தியமாக முடியும்?

சொற்களில் சூட்சுமம்

ஒற்றையாட்சியைக் குறிக்கின்ற யுனிட்டரி ஸ்டேட் என்ற ஆங்கிலச் சொல்லை அகற்றிவிட்டு ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்களச் சொல்லை அடிப்படையாகக் கொண்டு அதற்குத் தமிழில் ஒருமித்த நாடு என்று வியாக்கியானம் கூறப்படுகின்றது. யுனிட்டரி ஸ்டேட் என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தினாலும்சரி, புதிய அரசியலமைப்பில் உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்படுகின்ற ஆட்சி முறை குறித்து ஆங்கிலத்தில் குறிப்பிட்டாலும்கூட, அது அரசியல் ரீதியாகக் குழப்பத்தை விளைவிப்பதாக அமையும் என்ற காரணத்திற்காகவே ஆங்கிலத்தைத் தவிர்த்து, சிங்களச் சொல்லாகிய ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்களச் சொல் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காரணம் கூறப்பட்டிருக்கின்றது.

ஏக்கிய ராஜ்ஜிய என்பது அன் டிவைடபிள், இன்டிவிடிசிபிள் (ருனெiஎனைநயடிடநஇ iனெiஎளைiடிடந) பிரிக்கப்பட முடியாத அல்லது பிளவபட முடியாத என்று ஆங்கிலத்தில் பொருள்படுவதாக சட்டத்துறையினர் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

சிங்களச் சொல்லாகிய ஏக்கிய ராஜ்ஜிய என்பது ஒற்றையாட்சியையே குறிக்கும். எனவே சமஸ்டி முறைக்கு புதிய அரசியலமைப்பில் இடமில்லை. சிங்கள மக்களையும் சிங்களத் தேசியவாதிகளாகிய சிங்கள அரசியல் தீவிரவாதிகளையும் திருப்திப்படுத்துவதற்காக, ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்களச் சொல்லை இராஜதந்திர ரீதியில் அரச தரப்பினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை அனைத்து விடயங்களிலும் வழங்கிச் செயற்பட்டு வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், தலைமைக்கட்சியாகிய தமிழரசுக் கட்சியும், சொற்களில் உள்ள இந்த சூட்சுமத்தை, தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை.

ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்களச் சொல்லால் குறிப்பிடப்படுகின்ற புதிய ஆட்சி முறை என்று சொல்லப்படுகின்ற முறையின் கீழ், மத்திய அரசாங்கத்தினால், மீளப்பெற முடியாத வகையில், தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கையூட்டப்படுகின்றது. இந்த அரசியல் செயற்பாட்டின் தன்மையை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

புதிய அரசியலமைப்புக்கான வரைபு இன்னும் வரவில்லை. ஆனாலும்…..

ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல்லின் உண்மையான அரசியல் ரீதியான கருத்து என்ன என்பதையம், ஒருமித்த நாடு என்பதன் அரசியல் ரீதியான உண்மையான எருத்து என்ன என்பதையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அறியாதிருக்கி;ன்றார்கள் என்று கூற முடியாது.

ஆனால் இந்த இரண்டு சொற்களுமே நேர் முரணானவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு புதியதோர் அரசியலமைப்பு உருவாக்கப்படுமேயானால், அது இப்போதுள்ள அரசியல் சிக்கல்களைவிட, அதிக சிக்கலான அரசியல் நிலைமைக்கே வழி சமைப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் இடைக்கால அறிக்கையொன்றே வெளியிடப்பட்டிருக்கின்றது. புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபு இன்னும் வெளியிடப்படவில்லை. அத்தகைய வைரபுகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவுமில்லை என்று அரசாங்கத் தரப்பினரும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டல் குழுவினரும் கூறுகின்றனர்.

புதிய அரசியலமைப்புக்கான வரைபு இன்னும் தயாரிக்கப்படாவிட்டாலும்கூட, அதனைத் தயாரிப்பதற்கான வழிகாட்டியாகவே இடைக்கால அறிக்கையில் விடயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக புதிய அரசியலமைப்பில் அடிப்படையாக என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை .இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. எனவே, அடிப்படை விடயங்கள் நம்பிக்கையூட்டத்தக்கதாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

அடிப்படை விடயங்களைக் குறிப்பிடுகின்ற இடைக்கால அறிக்கை முழுமையாக விடயங்களைக் கொண்டிருக்க முடியாது என்ற வாதம் ஏற்புடையதே. ஆயினும், அதில் கூறப்படுகின்ற விடயங்கள் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பத்தக்க வகையில் அமைந்திருப்பது வரவேற்புக்கு உரியதல்ல. அடிப்படை விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, அந்த விடயங்கள் மேலும் விரிவுபடுத்தப்படுவதற்குரிய விவாத வெளியைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் ஆட்சி முறை என்பதே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ற்ததாக அமைந்திருக்கின்றது. ஆட்சி முறையே சிக்கல் நிறைந்ததாகவும், முரண்பாடுடையதாகவும் அமைந்திருக்குமானால், புதிய அரசியல் அமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணத்தக்கதாக அமையும் என்று நம்பிக்கை கொள்வது எப்படி?

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு……

ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம், தேர்தல் முறையில் மாற்றம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற மூன்று விடயங்களும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சிக்கே ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை கூறியிருந்தது.

ஆனால் இந்த மூன்று விடயங்களில் முதல் இரண்டு விடயங்களும் ஏற்கனவே தீர்வு காணப்பட்;டுவிட்டன அல்லது ஓரளவுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது என்பதே இப்போதைய நிலையாகும். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில், திருப்தியளிக்கத்தக்க வகையில் இன்னும் முன்னேற்றம் காணப்படவில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிக்கு ஆதரவு வழங்க முன்வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையே முதன்மைப்படுத்தியிருந்தது. புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாகவும் அமைந்திருந்தது.

ஆயினும் சுயநிர்ணய உரிமை, பகிரப்பட்ட இறையாண்மை, பகிர்ந்தளிக்கப்படுகின்ற அதியுச்ச அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறை என்பவற்றை உள்ளடக்கியதாகவே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்று மக்கள் மத்தியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது. அரைகுறையான தீர்வை ஏற்றுக்கொள்ளமாட்டோம். அந்த வகையில் தமிழ் மக்களை ஏமாற்றமாட்டோம். தமிழ் மக்களை விற்கவும் மாட்டோம். அரைகுறை தீர்வை ஏற்றுக்கொண்டு யாருக்கும் விலைபோகவும் மாட்டோம் என்று கூட்டமைப்பின் தலைமையும், தமி;ழரசுக் கட்சியும் மக்கள் மத்தியில் சூளுரைத்து வருகின்றது.

ஆனால் புதிய அரியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் இருவரும் தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வுக்காக உரிய முறையில் குரல் கொடுத்தார்களா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அவ்வாறு அவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றே வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ள எதிரணியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கருத்து கூறியிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்துகளுக்கு உரிய முறையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் இருந்து மறுப்பு கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

அதேவேளை, வழிநடத்தல் குழுவின் கலந்துரையாடல்கள், விவாதங்களில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உரிய முறையில் முன்வைக்கப்பட்டிருந்தால், அவற்றின் அம்சங்கள் இடைக்கால அறிக்கையில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அவைகள் உரிய முறையில் வெளிப்பட்டிருப்பதாகவும் தெரியவில்லை. மாறாக அடிப்படையையே தகர்க்கத்தக்க வகையில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சிங்களச் சொல் பயன்படுத்தப்பட்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி முறைமையை மேலும் இறுக்கமாக பேணுவதற்கே வழி சமைக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, அரசியல் தீர்வுக்கான இந்த அரசியல் நிலைமையானது தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் மிகவும் மோசமானது. சூட்சுமமான சொற்களில் அரசியல் தீரவு சிக்கியுள்ளதன் மூலம், தமிழ் மக்களுக்கு மோசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பின்னடைவுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை துணைபோயுள்ளதோ என்ற சந்தேகத்தையும் இப்போதைய நிலைமை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே கூற வேண்டும்..

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *