இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இடைக்கால அறிக்கையும் யதார்த்த நிலைமையும் – பி.மாணிக்கவாசகம்:-

பதட்டமும் பரபரப்பும் மிக்க ஒரு சூழலில் ஆரம்பித்துள்ள புதிய அரசியலமைப்புக்கான விவாதம் எந்த வகையில் சென்று முடிவடையும் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. அரசியலமைப்பு என்பது நாட்டின் வருங்கால ஆட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் செல்நெறியின் முதுகெலும்பாகும். எனவே, மிகுந்த பொறுப்போடும், நிதானமாகவும் நேர்மையாகவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் விசுவாசமான முறையிலும் அது உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பொறுப்புணர்ச்சியுடன், அனைத்துத் தரப்பினராலும் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான விவாதம் நடத்தப்படக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில், ஒரு கூட்டம் விவாதம் நடைபெறுகின்ற நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டிருந்தது. இதனால், நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமைக்கு அரசாங்கம் ஆளாகியிருந்தது.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பிளவுபட முடியாத நாட்டுக்குள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான பேச்சுக்களுக்கு, இந்த விவாதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பிளவுபட முடியாத அல்லது பிரிக்கப்பட முடியாத நாடு என்ற கோட்பாட்டின் மீதான ஆட்சி முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியின் முக்கிய பங்காளிகளான அரச தரப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஏற்கனவே இணக்கம் கண்டிருக்கின்றனர்.

பொது எதிரணியினரின் எதிர்ப்பு

ஆனால், புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டைத் துண்டாடுவதற்கான முயற்சிக்கு அரசாங்கம் துணை போயுள்ளதாக ஈடுபட்டுள்ள பொது எதிரணியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். அத்துடன் இந்த விவாதத்தைக் குழப்புவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமது அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒரு தேசிய இனம் என்ற வகையில் தமக்குரிய ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாத காரணத்தினாலேயே, தமிழர் தரப்பினர் சாத்வீகப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். அந்தப் போராட்டங்கள், அதிகார தோரணையிலி; ஆயுத வலுவைக் கொண்டு அடக்கியொடுக்கப்பட்டதன் விளைவாகவே, தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் குதித்திருந்தனர். அஹிம்சை போராட்டத்தைப் போலவே, ஆயுதப் போராட்டமும் தந்திரோபாய ரீதியில் அரச தரப்பினரால் தோற்கடிக்கப்பட்டது.

அஹிம்சை ரீதியாகவும், ஆயுமேந்தியும் நடத்தப்பட்ட போராட்டங்கள் பேரினவாத சக்திகளினால் மிகவும் தந்திரமான முறையில் முறியடிக்கப்பட்ட ஒரு பின்னணியில், ஐக்கிய இலங்கைக்குள் முறையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காகவே, தமிழ்த்தரப்பினர், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளித்துள்ளனர். எனவே, இது நாட்டைப் பிர்ப்பதற்கான அல்லது நாட்டை இரண்டாகத் துண்டாடுவதற்கான ஒரு முயற்சியல்ல என்பது தெளிவாகியிருக்கின்றது.

இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மகி;ந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களாகிய பொது எதிரணியினர். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சியும், இந்த விவாதமும் நாட்டைப் பிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கை என சித்தரித்து அதனைக் குழப்பியடிக்கும் நோக்கத்துடன் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பின் ஓர் அம்சமாகவே பொது எதிரணியைச் சேர்ந்தவர்களும், அவர்களது ஆதரவாளர்களுமாக சுமார் 500 பேர் கொண்ட ஒரு கூட்டம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கு எத்தனித்திருந்தது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த பலமான பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளக முரண்பாடு

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதை முழுக்க முழுக்க சுயநல அரசியல் காரணங்களுக்காக பொது எதிரணியினர் எதிர்த்து வருகின்றனர். ஆயினும் அந்த எதிர்ப்பை முறியடித்து எப்படியாவது புதிய அரசியமைப்பை உருவாக்கிவிட வேண்டும் என்ற ஓர்மத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

இது ஒருபுறமிருக்க, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமிழர் தரப்பின் நிலைப்பாட்டில் உள்ள முரண் நிலைகள் காணப்படுவதைத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

இணைந்த வடக்குகிழக்கில், பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையுடன் சுயநிர்ணய உரிமையுடையதோர் அரசியல் தீர்வே வேண்டும் என்று நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் ஆணை பெற்றிருந்தது.

புதிய அரசியலமைப்பின் ஊடாகக் காணப்படுகின்ற அரசியல் தீர்வு இந்தத் தேர்தல் ஆணைக்கு அமைவாகவே காணப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர்கள் அஎத்துக் கூறி வந்தார்கள். இன்னும் கூறி வருகின்றார்கள்.

ஆனால் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கத்தக்க விடயங்கள் எதுவுமே இடம்பெறாத நிலையில் அந்த அறிக்கை மீதான விவாதத்தின் ஊடாக நியாயமானதோர்; அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற வகையிலான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சித்திருக்கின்ற ஒரு போக்கைக் காண முடிகின்றது.

இது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாட்டிற்கு நேர் முரணான ஒரு நிலைப்பாடாகும். இவ்வாறு ஒரு முரண்பாடான நிலைமையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், அரசியல் நலன் சார்ந்த விடயங்கள் எந்த வகையில் முன்னோக்கி நகர்த்திச் செல்லப்பட முடியும் என்பது தெரியவில்லை.

அதேவேளை, இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் தமிழ் மக்களின் ஆணை குறித்தோ அல்லது அவர்களின் அரசியல் அபிலாசைகள் குறித்தோ கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்வது என்ன வகையான அரசியல் இராஜதந்திரம் என்று தெரியவில்லை.

ஆதரவும் முரண்பாடும்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்குவதற்கு வழிகோலிய 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் வரையில் எதிர்ப்பு அரசியல் போக்கைக் கடைப்பிடித்து வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே இணக்க அரசியல் வழியில் பிரவேசித்திருந்தது.

இத்தகைய இணக்க அரசியல் போக்கில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அனைத்து விடயங்களிலும் மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றது. தமிழ் மக்களின் அரசியல் நலன்களை வென்றெடுப்பதற்காகவே இத்தகைய இணக்க அரசியல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் செயற்படுவதாக, தமிழ்;த்தேசிய கூட்டபைமப்பின் தலைமை தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற போதிலும், நடைமுறை அரசியல் எதிர்மாறானதாகவே காணப்படுகின்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத காரணத்தினால் அவர்கள் தமது எதிர்காலம் குறித்த கவலையோடும் எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற ரீதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மக்களுடைய இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியம். ஆனால், அவ்வாறு அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்தைக் கொண்ட செயற்பாடுகளை உறுதியான முறையில் அது முன்னெடுத்திருப்பதாகத் தெரியவில்லை.

புத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்;பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான காணிகள் இன்னும் இராணுவத்தின் பிடியிலேயே இருக்கின்றன. அநதக் காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாக்கு போக்கு கூறுவதிலும், காலத்தை இழுத்தடிப்பதிலுமே அரசாங்கம் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வருகின்றது,

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன், பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கூடிய அழைப்பை ஏற்று, இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலருக்கு என்ன நடந்தது என்பது, எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அவர்கள் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற குழந்தைப் பிள்ளை நிலையிலான உண்மையையும்கூட ஏற்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

அவ்வாறு விடுதலைப்புலி உறுப்பினர்கள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை. விடுதலைப்புலி உறுப்பினர்கள் எவரையும் தாங்கள் கைது செய்யவில்லை என்று இராணுவ அதிகாரிகள் வாய் கூசாமல் கூறி வருகின்றார்கள்.

இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணையில், இராணுவ கட்டமைப்பைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவரும்கூட உண்மைக்கு மாறான வகையில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருக்கின்றார். இதையும்விட எந்த ஒரு இராணுவ வீரரையும் நீதியின் முன்னால் நிறுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம் என்று அரசாங்கம் உறுதியாகக் கூறி வருவது இன்னும் கொடுமையானது.

இதையும்விட, விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள். யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இராணுவத்தினரை உயிரிழக்கச் செய்தார்கள் அல்லது அவர்களைக் கொலை செய்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலையையும் அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது. அரசியல் ரீதியாக முடிவு காணப்பட வேண்டிய தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை சட்ட ரீதியான விடயமாக குற்றவியல் நடவடிக்கைகள் என்ற தோரணையில் வியாக்கியானங்களைக் கூறி காலம் கடத்துவதிலேயே அரசு ஆர்வமாக உள்ளது.

இவ்வாறு தீர்க்கப்படாமல் உள்ள, உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான நல்லிணக்கப் போக்கைப் பயன்படுத்தவில்லை. பரஸ்பரம் ஒத்துழைத்துச் செயற்படுவதே அரசியல் நல்லிணக்கம் ஆகும்.

ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்தின் நலன்களைப் பேணுவதிலும், அவற்றுக்குப் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் காட்டுகின்ற கரிசனையே அதிகமாகக் காணப்படுகின்றது. ஏகோபித்த நிலையில் வாக்களித்து, தனக்கு அரசியல் அந்தஸ்தை அளித்துள்ள மக்களின் நலன்களில் காட்டப்படுகின்ற கரிசனை ஒப்பீட்டளவில் குறைவாகவே காப்படுகின்றது.

அரசியல் நிலைப்பாடு

இத்தகைய ஒரு பின்னணியில்தான் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின் ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியிடப்பட்டிருக்கின்றது. இதனை கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டு பிரகடனமாகவே கருத வேண்டும்.

இடைக்கால அறிக்கையில் உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் நாட்டின் ஆட்சி முறை ஏக்கிய ராஜ்ஜிய – ஒற்றை ஆட்சி என்றே அமையும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிலைப்பாட்டை இந்த விவாதத்தின் போது அரசாங்க தரப்பில் உரையாற்றிய சபை முதல்வரும், அமைச்சருமாகிய லக்ஸ்மன் கிரியல்ல உறுதிப்படுத்தியிருக்கின்றார். ஒற்றையாட்சியின் கீழ் அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த அறிக்கை தொடர்பான விவாதத்தின் ஆரம்பத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் கூட்;டாட்சியையே கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒற்றை ஆட்சி முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது. சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அரசாங்கம் உறுதிபட தெரிவித்துள்ளது. வழி நடத்தல் குழு பல தடவைகள் கூடி கலந்துரையாடியதன் பின்னர் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒற்றை ஆட்சி பொருத்தமற்றது. அதற்குப் பதிலாக கூட்டாட்சி முறை அவசியம் என்பதை வலியுறுத்துவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பிலான சுமந்திரனுடைய கூற்று அமையவில்லை. அதேபோன்று வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்படாவிட்டால் கூட்டமைப்பு நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதுபற்றி குறித்துக் காட்டும் கருத்துக்களும் இடம்பெறவில்லை.

முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் கட்சி இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஏற்கனவே நிராகரித்திருக்கின்றது. ஆனால், அந்த அறிக்கை தொடர்பான விவாதத்தில் கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன என்றே அவர் கூறியுள்ளார்.

மறுப்பும் ஆதரவும்

இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்ல. இந்த விவாதத்தின் போது தங்களுடைய கட்சியின் நிலைப்பாடு குறித்த கருத்துக்களை ஈபிஆர்எல்எவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் செயலாளருமாகிய சிவசக்தி ஆனந்தன் வெளியிடுவதைத் தவிர்ப்பதற்காகவே அவருக்கு இந்த விவாதத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு மறுத்திருக்கி;ன்றது.

இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொள்ளாதவர்களை இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக, அதற்கான காரணத்தையும் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்;திற்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பகரமான நிலைமையே காணப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், யுத்த மோதல்கள் இடம்பெற்ற மீள்குடியேற்றப் பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்கள் அமைந்துள்ள காணிகளில் அந்த ஆலயங்களுக்கு அருகிலேயே இராணுவத்தினரும், இராணுவத்தின் உதவியோடு பௌத்த பிக்குகளும் புத்தர் சிலைகளை நிறுவியிருக்கின்றார்கள்

அத்துடன் புத்தசமய மக்கள் இல்லாத இத்தகைய இடங்களில பௌத்தவிகாரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பௌத்த மத அத்துமீறல் செயற்பாட்டினால் தமிழ் மக்களுடைய மத சுதந்திரம் அப்பட்டமாகப் பறிக்கப்பட்டிருக்கின்றது, இராணுவ அதிகார பலத்தின் துணையோடு தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமையான மத உரிமை பாதிக்கப்பட்டிருக்கின்றது.

இத்தகைய ஒரு நிலையிலேயே பௌத்த மதத்திற்கு முன்னரிமை அளிப்பதைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்ப எதிர்க்கமாட்டாது என்று கூட்டமைப்பின் சார்பில் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு அதுவல்ல. தமிழ் பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள புத்தர் சிலை நிர்மாணம், பௌத்த விகாரை அமைப்பு என்பவற்றினால் மனமுடைந்து போயுள்ள அவர்கள் மதங்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் இந்த நிலைப்பாடு இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின் ஆரம்ப நிகழ்வில் கூட்டமைப்பினால் வெளிப்படுத்தப்படவில்லை.

மொத்தத்தில் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின் ஆரம்பமானது, தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வல்லதோர் அரசியலமைப்புக்கு வழிகாட்டும் வகையில் அமையவில்லை என்பதையே காணக்கூடியதாக உள்ளது.

இந்த விவாதமானது இடைக்கால அறிக்கை தொடர்பானது என்பதும், இந்த விவாதத்தின்போது புதிய அரசியலமைப்புக்கான அடிப்படை விடயங்கள் குறித்து இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என்பதும் அதன் ஊடாக நியாயமான ஓர் அரசியல் தீர்வை நோக்கி நகர முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துக்களே.

இருப்பினும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தி வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதுவரையில் பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தமிழர் தரப்பு எதிர்கொள்ளப் போகின்ற கடுமையான நிலைப்பாடுகளில், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உறுதியாக நின்று சரியான முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

செய்வார்களா……?

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *