இந்தியா பிரதான செய்திகள்

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மெரினா கடற்கரையில் இருந்து மாற்ற வேண்டும்…

கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக சென்னையின் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் தமிழக முதலமைச்சர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடப்பட்டுள்ள மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் சென்னை மெரினா கடற்கரையில் 3 நினைவிடங்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 15 கோடி ரூபா செலவில் நினைவிடம் கட்டுவதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் கட்டுமானம் கட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மெரினாவில் நினைவிடங்கள் இருக்கும் நிலையில், அரசியல்வாதிகளின் விருப்பத்துக்காக இருக்கின்ற நினைவிடத்தின் அருகிலே மேலும் நினைவிடம் கட்டுகின்றனர். இதனால், உலகிலேயே இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை சுருங்கி வருகிறது.

மேலும், இப்பகுதியில் அடிக்கடி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுவதால், பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது

எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்க மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களை 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோட்டூர்புரம் காந்தி மண்டபத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

குறித்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையிலேயே 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *