இந்தியா பிரதான செய்திகள்

பேரறிவாளனை விடுவிக்கக்கூடிய வாக்குமூலத்தின் பகுதிகளை நீக்கினேன் – முன்னாள் சிபிஐ அதிகாரி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் அன்று அளித்த வாக்குமூலத்தில் சில பகுதிகளை சிபிஐ நீக்கியதாக அவரை விசாரித்த இந்தியப் புலானாய்வுத்துறை அதிகாரி வி.தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 23 ஆண்டுகாலம் தனிமைச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இரண்டு 9 ஓல்ட் பட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்த பகுதிகள் உட்பட பல பகுதிகளை நீக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு பட்டரிகளும் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை தான் பதிவு செய்யவில்லை என்றும் இந்த வாக்குமூலமே அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்திருக்கக் கூடும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

அப்போதைய சூழலில் வாக்குமூலம் பதிவு செய்யும் நோக்கத்தையே இழந்து விடும் என்பதாலும் இது பதிவு செய்யத் தகுதி பெறாதது என்றும் முடிவெடுத்து அதனை பதிவு செய்யவில்லை என்றும் மேலும் அந்தச் சமயத்தில் வெடிகுண்டு பற்றிய விசாரணையும் நிலுவையில் இருந்ததாகவும் கூறினார்.

பேரறிவாளனின் பங்கு பற்றி இந்திய புலனாய்வுத்துறையிடம் உறுதியான தகவல்கள் இல்லை எனவும்  சதி பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்பது கொலை வழக்கு விசாரணை தொடர்ந்தபோது உறுதி செய்யப்பட்டது என குறிப்பிட்ட தியாகராஜன் இது பற்றி சிவராசன், புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பொட்டு அம்மானுக்கு அனுப்பிய வையர்லஸ் செய்தியையும்  தெரிவித்தார்.

அச் செய்தியில், தான், தனு, சுபா ஆகிய மூவர் தவிர கொலை சதி வேறு ஒருவருக்கும் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளதை கூறிய தியாகராஜன் இதனையடுத்து பேரறிவாளன் எதற்காக இரண்டு பட்டரிகள் வாங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது என்று கூறியது உண்மையானதுதான் என்று உறுதியானதாக அவர் தெரிவித்தார்.

எனவே மரண தண்டனையிலிருந்து பேரறிவாளனுக்கு கருணை காட்டிய உச்ச நீதிமன்றம் நீண்டகாலமாக நிலுவயில் உள்ள அவரது விடுவிப்பையும் கருணையுடன் அணுக வேண்டும் என்றும் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று தானாகவே முன்வந்து தன்னால் நீக்கப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை வெளிப்படுத்தியதாகவும் தியாகராஜன் கேட்டுக் கொண்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வின் முன் பேரறிவாளன் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வெடிகுண்டைத் தயாரித்த குற்றவாளி இலங்கை சிறையில் இருப்பதாகவும் இன்று வரை அவரை விசாரணையே செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இரண்டு பட்டரிகளை வாங்கிக் கொடுத்ததற்காக அறியாச் சிறு வயதிலிருந்து ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச்சிறையில் வாடி வருவதாகவும் வெடிகுண்டில் இந்த பட்டரிகள்தான் பயன்படுத்தப்பட்டது என்பது கூட ஊகம்தான் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, பேரறிவாளன் தண்டனைக் குறைப்பு குறித்த தமிழக அரசின் முடிவை இந்திய மத்திய அரசு ஏற்கிறதா என்பதை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *