இலங்கை பிரதான செய்திகள்

நல்லாட்சியில் நம்பிக்கையுண்டு என்கிறார் சம்பந்தன்:

sambanthar

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும். இதனை நாங்கள் நல்லுள்ளத்துடன் வரவேற்கிறோம். தற்போதைய நல்லாட்சியில் எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” எனவும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

 

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

 • நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்கும். எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்தமுறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையும் என்று விலை போன தலைவர் சம்பந்தர் பாட, ரணிலும் பாடலுக்கு ஏற்ப தாளம் போட்டார்.

  இலவு என்றால் இலவம் பஞ்சு ஆகும். இந்த மரத்தில் காய்க்கும் காய்கள் பெரிதாகவும், பச்சையாகவும் இருக்கும். இது பழுத்து பழமாக மாறாது. அந்த மரத்திற்கு வரும் ஒரு கிளி இந்தகாய் ஒரு நாள் பழுக்கும் நாம் அதை உண்ணலாம் என்று காத்துக் கொண்டே இருந்தது. ஆனால் அது பழுக்காமல் வெடித்து சிறிய பஞ்சுகளாக காற்றில் பறந்தது. தினமும் காத்து இருந்த அந்தக் கிளி கடைசியில் ஏமாற்றம் அடைந்தது. இதுதான் சம்பந்தருக்கு நடந்தது, நடக்கின்றது மற்றும் நடக்கப் போகின்றது. இதை உணர்ந்து, நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, பிரச்சனைகளை தீர்க்கும் செயல்முறையை பின்பற்றி, கீழே கூறிய இன்று வரை உள்ள பிரச்சனைகளுக்கான காரணங்களை அறிந்து, அவற்றை நீக்கும் செயல்களை நடை முறைப்படுத்த பெரு முயற்சிகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும்.

  1.பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கேட்கும் அனைத்துலக விசாரணை இல்லை.
  2.கலப்பு விசாரணை இல்லை.
  3.பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் இல்லை.
  4.காணிக் கொள்கையில் மாற்றம் இல்லை.
  5.பயங்கரவாதத் தடைச்சட்டம் அகற்றப்படவில்லை.
  6.சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
  7.முழு அரசியல் கைதிகளுக்கும் விடுதலை இல்லை.
  8.ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை.
  9.முழுமையான வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை.
  10.சமஷடி இல்லை.

  சம்பந்தர் குழு பிரச்சனைகளைத் தீர்க்க சில முயற்சிகளை எடுத்துள்ளது. ஆனால் வேகமும் செய்யும் பணிகளும் போதாது. வேகமாகச் செயல் பட்டால் அரசாங்கமும்வேகமா செயல்படக் கூடும். நாம் தற்போதைய வாய்ப்புகளை தவறவிடக் கூடாது. ஐநா மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களை நடை முறைப்படுத்த தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தங்கள் பங்கை முழுமையாக செலுத்தி, பொது மக்களுக்கு முன்மாதிரியாக, தங்கள் செயல்திறனை மேம்படுத்தி, பயனுள்ள பணிகளை துரிதமாகச் செய்ய வேண்டும்.

  அவர்கள்தங்கள் தவறுகளை கண்டு பிடித்து, அவற்றை ஏற்று, திருத்திக்கொண்டு, திட்டங்களைத் தீட்டி, திறம்பட முகாமைத்துவம் செய்து தமிழர்களளை காப்பாற்றவேண்டும்.