இலங்கை பிரதான செய்திகள்

நல்லாட்சியிலும் சித்திரவதைச் சம்பவங்கள்?

human-raights-srilanka
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி நடத்தும் காலப் பகுதியிலும் இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் எட்டு மாத காலப் பகுதியில் 208 சித்திரவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவிற்கு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள 17 பக்க அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாரிய சித்திரவதைகள், கொடூரமான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்கள் சட்ட மா அதிபரிடம் கோரப்பட்ட போதிலும் அந்த விபரங்கள் கிடைக்கவில்லை என மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொட்டாதெனியவா சிறுமி கொலை தொடர்பில் மாணவர் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைகளில் தாக்கியமைக்கு மேலதிகமாக பிளாஸ்டிக் குழாய்களினால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் மற்றும் தடுத்து வைக்கப்படும் நபர்களை சந்திக்க செல்லும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேர்வதாக சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 111 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 29 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தப்படாது 15 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சில வழக்குகள் 2002ம் ஆண்டு முதல் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் சித்திரவதைகளை வரையறுத்தல் ஆகியனவற்றுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *