இலங்கை பிரதான செய்திகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பது நாட்டை அதள பாளத்துக்கு தள்ளும் – கிழக்கு முதலமைச்சர்:

east-cm_ci
கிழக்கு மாகாணத்தில் பாரிய ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகையில் மாகாண ஆசிரியர்களை வெளி மாகாணங்களில் நியமிப்பதனை கிழக்கு மாகாணத்தை கல்வியில் புறக்கணிப்பதாகவே  கருத வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு  வெளியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்திலேயே நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மகஜனாக் கல்லூரியில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

இம்முறையும் மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்ற ஆசிரியர்களை மாகாணத்துக்கு உள்ளே நியமிப்பதற்கு பல போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார். அடுத்த ஆண்டும் இந்த நிலைமை தொடரக் கூடாது எனவும் இனிமேலும் கல்வித்துறையில் கிழக்கு மாகாணத்துக்கு மத்தியரசு அநீதியிழைக்கக் கூடாது எனவும்  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தினார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் நாட்டில் எவரும் இருக்கு முடியாது எனவும் அரசியலமைப்பில் உள்ள அதனை அமுல்ப்படுத்துவதாக சத்தியப் பிரமாணம்   செய்து விட்டு  தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்வது சிறந்தது அல்ல எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

13 திருத்தம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்குமானால் ஆசிரியர்கள் வெளிமாகணங்களில் அலைந்து திரிய வேண்டிய நிலை  ஏற்பட்டிருக்காது எனவும் முன்னர் மாகாண சபையை ஆட்சி செய்தவர்கள் விட்ட தவறினாலேயே ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் வெளி மாகாண நியமனம் போன்றவை இன்று தோற்றம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார். அவர்கள்  அன்று  இந்தப் பிரச்சினைகள் குறித்து பாராமுகமாக இருந்தமையினாலேயே இந்தப் பிரச்சினைகள் இன்று விஸ்வரூபமெடுத்துள்ளதாகஅவர் குறிப்பிட்டார்.

மேலும்  இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிப்புச் செய்யப்படுவதன் ஊடாக நாடு அதள பாளத்துக்கு தள்ளப்படும் நிலை உருவாகும் எனவும் ஏற்கனவே நாடு பாரிய அழிவுகளை சந்தித்துள்ள நிலையில் அரசியல் தீர்வு காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் வலியுறுத்தினார். கிழக்கு மாகாணத்தில் பணிபுரியும் ஆசிரியர்களிடமே மாகாணத்தின் எதிர்காலம் தங்கியுள்ளதுடன் அவர்கள் அதனை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *