கட்டுரைகள் பிரதான செய்திகள்

முன்னாள் போராளிகளும் துரத்தும் அவலங்களும்? செல்வா. நிலா:

tragedy

இந்தப் பதிவு செல்வா. நிலாஎன்பவரால் எமது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது:-

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஒரு புறம் சிங்கள இனவாத அமைப்புக்கள் வடக்கில் ஏற்படுத்தப்பட்ட  சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ள நிலையில். மறு புறம் விடுவிக்கப்பட்ட  முன்னாள் போராளிகள் மற்றும் தடுப்பில் உள்ள முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கும்  சித்திரவதைகளுக்கும் உள்ளாவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஒரு புறம் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோர் முன்னாள் போராளிகளை தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக கூறி மைத்திரிபால அரசாங்கம் விடுவிக்கப்பட்ட பல முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளை கைது செய்து எதுவித காரணங்களும் கூறாது நீண்டகாலமாக தடுத்துவைத்துள்ளனர்.

மறு புறம் தற்போது வடக்கில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகளை உருவாக்கி அதற்கான காரணங்களாக கூறப்படும் ஆவா குழு மற்றும் பிரபாகரன் படை உள்ளிட்ட குழுக்களின் நடவடிக்கைகளுக்கு முன்னாள் போராளிகளே காரணமென கூறி முன்னாள் போராளிகளை பின்தொடரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மிகுந்த சித்திரவதைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளான முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பங்களும் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரின் கட்டளைகளுக்கு இணங்கி நடந்தால் தான் உயிர்வாழ முடியும் என்ற சூழலில் அவர்களுக்காக பாணியாற்றி விடுதலை ஆகியிருந்தனர்.

இன் நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நல்லாட்சி அரசாங்கம் மகிந்தராஜபக்ச அரசின் கட்டளைகளுக்கு பணியாற்றியதாக கூறி பல முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளை கைது செய்து விசாரணை செய்து வருவதுடன் விடுவிக்கப்பட்ட பல போராளிகளை மீண்டும் கைது செய்ய தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பலரை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் காலத்தில் நடைபெற்ற கொலைகளுக்கான அரச சாட்சிகளாக மாற்றியும் வருகின்றனர். இதனால் குறித்த முன்னாள் போராளிகளின் தலைவர்கள் மீது மகிந்த அணியினர் மிகுந்த கோபத்தில் உள்ளனர் இதனால் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களினாலும் மகிந்த ராஜபக்ச ஆதரவு புலனாய்வாளர்களினாலும் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று இல்லா விட்டாலும் மகிந்தராஜபக்சவின் ஆதரவாளர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போது இன்று மைத்திரி அரசாங்கத்தால்  கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றவர்கள் நாளை மீண்டும் மகிந்தராஜபக்ச அணியினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படலாம். இவ்வாறு தொடர்ச்சியாக ஆட்சி பீடமெறும் அனைத்து அரசாங்கங்களும் சிங்கள பெரும்பான்மை இனவாத அமைப்புக்களும் வடகிழக்கில் ஏற்படுகின்ற வன்முறைகளுக்கு மகிந்தவின் அணியினரால் ஏற்படுத்தப்படுகின்ற சதி திட்டங்களுக்கும் முன்னாள் போராளிகள் தான் காரணம் என குற்றம்சாட்டி அவர்களை கைது செய்து அடைத்துவைக்கின்ற நடைமுறைகள் இனியும் தொடரத்தான் போகின்றது.

முன்னால் போராளிகளின் குடும்ப அவலங்கள்!

இவ்வாறு அடைக்கப்படுகின்ற ஒவ்வொரு முன்னாள் போராளிகளின் குடும்பங்களும் அனுபவிக்கின்ற துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. நான்காம் மாடியில் உள்ள தனது உறவுகளை வாராந்தம் பார்வையிடச் செல்பவர்கள் தங்களுக்கான போக்குவரத்து பாதுகாப்பு தங்கிமிடம் என பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம்கொடுப்பதுடன். தங்களது பிள்ளைகளின் உணவு கல்வி நாளாந்த செயற்பாடுகளுக்காகவும் போராடவேண்டியுள்ளது.

எந்தவித சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாது தங்களது உறவுகளின் கைதுக்கான காரணங்களை தெரியப்படுத்தாது தொடர்ச்சியாக கைது செய்தவர்களை தடுத்துவைத்திருக்கும் செயற்பாடானது முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் எப்போதும் எப்படியும் எங்கும் வைத்து கைது செய்யப்படக் கூடியவர்கள் என்ற நியாயப்பாட்டை இந்த நாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதோடு. அவர்களை கைது செய்து தடுத்துவைப்பது என்பது இந்த நாட்டின் கௌரவமான அரசியலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் இன்றும் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த மாதம் 29ம் திகதி கையொப்பம் இடுவதற்காக கொழும்பு நான்காம் மாடிக்குச் சென்ற முன்னாள் போராளி ஒருவர் எந்த வித காரணமும் கூறாது கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த போராளியை கைது செய்தது தொடர்பாக யாருக்கும் அறிவிக்க கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி கூறியதோடு அது குறித்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கவும் மறுத்துவிட்டார்.

இவ்வாறு பல முன்னாள் போராளிகள் காரணங்கள் எதுவும் கூறப்படாது திடீர் திடீரென கைது செய்யப்படுவதுடன் அவர்களது குடும்பங்களும் அச்சுறுத்தப்படுவதால் வடகிழக்கில் நடைபெறும் பல கைதுகள் சித்திரவதைகள் என்பன வெளியுலகுக்கு தெரியவருவதில்லை.

குறிப்பாக கடந்த எட்டு மாதங்களில் 208 சித்திரவதைகள் இலங்கையில் பதிவாகியுள்ளதாகவும் அதில் அனேகமானவை முன்னாள் போராளிகளும் அவர்களது குடும்பங்களும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டபோதே நிகழ்ந்துள்ளதாக மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஐக்கியநாடுகள் சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 208 சித்திரவதைகளில் எதுவுமே எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்றால் இலங்கையின் ஊடகத்துறை எந்தளவுக்கு கட்டுப்பாட்டுடன் இயங்குகிறது என்பதை கணிப்பிட முடியும்.

எனவே முன்னாள் போராளிகளை வைத்து இந்த நாட்டில் நடத்தப்படுகின்ற அரசியல் தொடரத்தான் போகின்றது என்பதுடன் முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் இனிமேல் நடைபெற இருக்கும் வன்முறை அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவார்கள் என்பதற்கு தற்போது வடக்கில் நடைபெற்றுவரும் சம்பவங்களே சாட்சிகள் அமைந்துள்ளன.

எனவே முன்னாள் போராளிகள் குறித்த ஒரு வெளிப்படையான செயற்பாடு இந்த நாட்டில் உருவாக்கப்படவேண்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்கள் வாழ்வதை போன்று சாதாரண வாழ்க்கை நடாத்துவதற்காச சூழல் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் சுதந்திரமாக கருத்துக்களை ஊடகங்களுக்கும் ஏனை அமைப்புக்களுக்கும் வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் அவர்களை பயன்படுத்தி இந்த நாட்டில் உள்ளவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பொதுமக்களுக்கு சொல்வதற்கான வாய்ப்புக்களை இன்றுள்ள நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கவேண்டும். முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை வைத்து அரசியல் செய்வதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் கைவிடவேண்டும் என்பதே அவர்களது மனகிலேசங்களாக உள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *