இலங்கை பிரதான செய்திகள்

அரசியற்கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலைசெய்யுங்கள் ­ – வடமராட்சி கிறீஸ்தவ ஒன்றியம்

sign

‘’அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு’ குறிப்பிடும் விடயங்களை நாமும் அங்கீகரித்து, அரசியற்கைதிகளின் விடுதலை உடனடியாக நடைபெற வேண்டும் என அரசிடம் கோருகிறோம்’ என குறிப்பிடும் வடமராட்சி கிறீஸ்தவ ஒன்றியம், கையெழுத்துப் போராட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைவரையும் அழைக்கின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை (12.11.2016) அன்று காலை 8 மணி முதல் பி.ப 2..30 மணி வரை இப்போராட்டம் நடைபெறும்.  உடுப்பிட்டி (காலை 8 – 9 மணி வரை ), வல்வெட்டித்துறை (காலை 9 – 10 மணி வரை), நெல்லியடி (மு.ப 10 – 11 மணி வரை), பருத்தித்துறை (மு.ப 11 – மதியம் 12 மணி வரை), மந்திகை (மதியம் 12 – 1 மணி வரை), மருதங்கேணி (பி.ப 1.30 – 2..30 மணி வரை), குடத்தனை (பி.2.30 – 4 மணி வரை),  எனுமிடங்களில் இடங்களில் நடைபெறும் இக்கையெழுத்துப் போராட்டத்தில் பங்கேற்கும்படி வடமராட்சிகிறீஸ்தவ ஒன்றியம் அனைவரையும் அழைக்கின்றது

அறிக்கை:

அரசியற் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுங்கள்

வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம்

அரசியற்கைதிகளின் விடுதலை, அரசினால் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. மனிதாபிமானத்தோடு உடனடியாக இதனை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது,  இன்றைய இலங்கை அரசின் ‘நல்லாட்சி’ எனும் நிலைப்பாட்டையே சந்தேகிக்கச் செய்கிறது.

நல்லிணக்கம் ஏற்பட ‘நல்லாட்சி அரசு’, அரசியற்கைதிகளை விடுதலை செய்ய முன்வரவேண்டும். அரசியற் கைதிகளின் விடுதலை அரசின் ஒரு ஆரோக்கியமான அடையாளச் செயலாகும் என வடமராட்சி கிறிஸ்தவ ஒன்றியம் நம்புகிறது.

அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குறிப்பிடும் பின்வரும் விடயங்களை நாமும் அங்கீகரித்து அரசியற்கைதிகளின் விடுதலை உடனடியாக நடைபெற வேண்டும் என அரசிடம் கோருகிறோம்:

  1. அரசியற்கைதிகளின் விடுதலை நீதிமன்ற நடவடிக்கையால் மட்டும் முடிவுக்கு கொண்டு வரப்படக்கூடியதொன்றல்ல. அவர்களை கைது செய்யப்பட்டது முதல் ஒழுங்கான நீதியான முறையில் அவர்கள் நடத்தப்படவில்லை.
  2. அரசியற்கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசியற்கைதிகளால் அகிம்சைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, பலரும் ஆதரவளித்தனர், வாக்குறுதிகளும் பலரால் வழங்கப்பட்டன, ஆனால் அரசியற்கைதிகளின் விடுதலை மட்டும் நடைபெறவில்லை.
  3. அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்திய சிங்கள இளைஞர்கள் அரசினால் விடுவிக்கப்பட்டது போலவும் 2001 இல் அரசு தமிழ் இளைஞர்களை விடுவித்ததுபோலவும் அன்றைய அரசும் தற்போது சிறைகளிலுள்ள தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
  4. தற்போது சிறையிலுள்ள அரசியற்கைதிகளை விடுதலை செய்தால் ஆயுதப்போராட்டம் மீண்டும் தொடங்கும் என கூறுவதில் அர்த்தமில்லை.
  5. தற்போது சிறையிலுள்ள அரசியற்கைதிகளை விடுதலை செய்தல் என்பதை ஒரு தேசியப்பிரச்சினையாக நோக்கி இதுவரை காலமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வரவேண்டும்.

அகிம்சைப் போராட்டம் நசுக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு விடுதலை பெற ஒரே வழி ஆயுதப்போராட்டம் எனும் நிலை உருவாகியிருந்த போதே இவர்களும் போராடினர், கைதுசெய்யப்பட்டனர்.

ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் அரசினால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இவர்களை மட்டும் தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததொன்றாகும்.

சிறைப்பட்டோரின் குடும்பங்கள் படும் துன்பமும் வேதனையும் மிகவும் கொடூரமானது. முக்கியமாக பிள்ளைகள், பெண்கள், உறவுகள் கவலையுடனும் வேதனையுடனும் வாடுகின்றனர். மனிதாபிமான ரீதியில் இவர்களுடன் எம்மை அடையாளப்படுத்துவதும் இவர்களுடன் இணைந்து அரசியற்கைதிகளின் விடுதலைக்காக உழைப்பதும் எமது கடமையாகும்.

10.11..2016

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *