இலங்கை பிரதான செய்திகள்

நீரிழிவு தினத்தை முன்னிட்டு போதனா வைத்தியசாலை ஊழியர்களிடையே சைக்கிளோட்டப் போட்டியும் நடை பயணமும்.

worlddiabetesday

உலக நீரிழிவு தினமானது வருடந்தோறும் நவம்பர் மாதம் 14ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய உலகை உலுக்கி வரும் தொற்றா நோய்களுள் மிக முக்கிய இடத்தை வகிப்பது நீரிழிவு நோயாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் தேக அப்பியாசமற்ற வாழ்க்கை முறை என்பவற்றினால் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் இன்று பல்கிப் பெருகி வருகின்றது. இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டோரின் சதவீதமானது கணிசமான அளவு அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இன்றியமையாததாகும்.

நீரிழிவு நோய் தொடர்பான பல்வேறுபட்ட விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையமானது காலங்காலமாக முன்னெடுத்து வருகின்றது. இம்முறையும் உலக நீரிழிவு தினத்தையொட்டி நீரிழிவு சிகிச்சை நிலையமானது பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு அங்கமாக யாழ். போதனா வைத்தியசாலை விளையாட்டு மருத்துவ அலகுடன் இணைந்து வைத்தியசாலை ஊழியர்களிடையே எதிர்வரும் நவம்பர் 12ம் திகதியன்று (சனிக்கிழமை) உந்துருளி (சைக்கிள்) ஓட்டப் போட்டியொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.

இதேபோல எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி (திங்கட்கிழமை); நீரிழிவு நடைப் பயணமும்  (Diabetes Walk)  நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இந் நீரிழிவு நடைப்பயணமானது நவம்பர் 14ம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, கே.கே.எஸ் வீதி வழியாக யாழ். பொது நூலகத்தினை நோக்கிச் சென்றடையவுள்ளது. இதன் இறுதியில், யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் சைக்கிளோட்டப் போட்டி மற்றும் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட கவிதை மற்றும் சித்திரப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *