இலங்கை பிரதான செய்திகள்

கழிவகற்றல் ஒரு சமூகத்தின் தொழிலாக பார்க்கும் நிலை மாற வேண்டும் – ஆர்னோல்ட் :

arnold
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கழிவகற்றும் தொழில் ஒரு சமூகத்தின் தொழில் எனும் நிலை மாறி அது தொழில் சார் ரீதியான தொழிலாக மாற்றப்பட வேண்டும் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்து உள்ளார்.

வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினரான அ.பரம்சோதி யாழ்.மாநகர சபை சுகாதார தொழிலாளர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்திருந்தார். குறித்த பிரேரணையை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே உறுப்பினர் ஆர்னோல்ட் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாணத்தில் கழிவகற்றும் தொழில் ஒரு சமூகம் சார்ந்த தொழிலாகவும் , அந்த சமூகத்தை சார்ந்தவர்களே அந்த தொழிலை செய்ய வேண்டும் எனும் மனப்பாங்கு உண்டு அது மாற்றமடைய வேண்டும்.

கழிவகற்றும் தொழில் செய்பவர்களுக்கு , கழிவகற்றுவதற்கு பொருத்தமான உபகரணங்கள் , தொழிலாளர்களுக்கு உரிய ஆடைகள் , போன்றவற்றினை வழங்கி கழிவகற்றல் ஓர் தொழில் சார் தொழிலாக மாற்றப்பட வேண்டும்.

மேலைத்தேய நாடுகளில் கழிவகற்றும் தொழில் ஓர் தொழில் சார் தொழிலாகவே பார்க்க படுகின்றது. அங்கு ஒரு சமூகம் சார் தொழிலாக அது இல்லை. அந்நிலை இங்கும் வர வேண்டும்.

அதேவேளை கடந்த காலங்களில் யுத்த காலம் என்பதனால் கழிவகற்றுவதற்கு உழவு இயந்திரங்கள் பாவிக்கப்பட்டன. இன்றும் அதனையே பல உள்ளூராட்சி சபைகள் பாவிக்கின்றன. எதற்காக இது நாள் வரை அவர்கள் கழிவகற்றளுக்கு உரிய வாகனங்களை கொள்வனவு செய்யவில்லை.?

அத்துடன் கழிவகற்றும் தொழில் செய்பவர்களுக்கு நேர வரையறை கொடுத்து அவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். காலை 6 மணிக்கு முதல் கழிவகற்றும் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட வேண்டும். இவற்றை எல்லாம் உள்ளூராட்சி சபைகள் கவனத்தில் எடுத்து செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *