இலங்கை பிரதான செய்திகள்

வரலாற்றுப்பாட நூல்களில் தமிழர் வரலாறு மறைக்கப்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா :

douglas-devananda

தமிழ் வரலாற்றுப் பாடநூல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும், அலற்சியப்போக்குடனும் காணப்படுகின்றது. இந்தக் குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டும். உண்மையான வரலாறை பிள்ளைகள் தெரிந்து கொள்ளும்போதுதான், நாமும் இலங்கையர் என்ற எண்ணமும், தேசிய நல்லிணக்கமும் உளப்பூர்வமாக பிள்ளைகள் மனதில் வளரும்; என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கல்வி அமைச்சில், கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தடவைகள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பல கேள்விகளை முன்வைத்ததுடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளைக் காண்பதற்கு உயர்மட்ட சந்திப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்து தருமாறும்; டக்ளஸ் தேவானந்தா அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே கல்வி அமைச்சில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வரலாற்று பாட நூல்களில் தமிழர்களினதும்,முஸ்லிம்களினதும் வரலாறு மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் இருப்பது தொடர்பாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் உட்பட மூத்த தமிழ் பேராசிரியர் தில்லைநாதன், வாழ் நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட தமிழ்ப் பேராசிரியர்கள்,  தமிழ் வரலாற்றுப்பாட விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள்,  கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் பாடநூல் ஆக்கப் பிரிவில் கடமையாற்றும் தமிழ் அதிகாரிகள், நூல் உள்ளடக்கத்தை தீர்மானிப்பவர்களாக இல்லாமல், சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்புச் செய்கின்றவர்களாகவும், எழுத்துப் பிழைகளை ஒப்புநோக்குச் செய்கின்றவர்களாகவுமே கடமையாற்ற முடிகின்றதாலும், துறைசார்ந்தவர்கள் போதுமான வகையில் அங்கு கடமையில் அமர்த்தப்படாததுமே இவ்வாறான தவறுகளுக்கும், புறக்கணிப்புக்களுக்கும் காரணம் என்பது ஆராயப்பட்டதுடன், அந்தக் குறைபாடு அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளவும்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக்காண்பதற்கும், பாடநூல்களில் தவறுகள் இடம்பெறாமல் இருப்பதற்கும் நிபுனத்துவம் வாய்ந்த மூவினத்தினரையும்  பிரதிநிதித்துவம் செய்வோரை உள்ளடக்கிய ஆக்கக் குழு ஒன்றை கல்வி அமைச்சில் உருவாக்குவது என்றும் இணக்கம் காணப்பட்டது.

அந்தக் ஆக்கக் குழு அமைப்பது தொடர்பாகவும், அந்தக் குழுவில் யார்? யார்? உள்ளடக்கப்படுவார்கள் என்பது தொடர்பாகவும் இவ்வாறானதொரு கூட்டத்தை விரைவில் நடத்தி அதில் தீர்மானிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதேவேளை ஏற்கெனவே 2017ஆண்டுக்கான பாடநூல்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவிட்டதால், 2018 ஆண்டுக்கான பாடநூல்களில் இங்கு சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை உள்ளடக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தபோது, அச்சிடப்பட்டுள்ள தமிழ்ப் பாடநூல்களில் காணப்படுகின்ற தவறுகளை நிவர்த்திக்கும் வகையிலான பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஏனைய தமிழ் பாடநூல்களில் காணப்படும் குறைபாடுகள், தவறுகளைத் திருத்தப்படுவதற்கும், எதிர்காலத்தில் பாடவிதானங்களை தீர்மானிப்பது, கருத்துப் பிழைகள் இடம்பெறாதவாறு விடயங்கள் உள்ளடக்கப்படுவது, அர்த்தப் பிழைகள் ஏற்படாதவாறு எழுத்துப் பிழைகளை சரிபார்ப்பது போன்ற விடயங்களை நியமிக்கப்படும் குழுவும், கல்வி அமைச்சும் இணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக முன்னெடுப்பதும் அவசியம் என்றும். டக்ளஸ் தேவானந்தா அந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *