இலங்கை பிரதான செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் தினம் – வடமாகாண முதலமைச்சர் உரை

wikkyசர்வதேச மனித உரிமைகள் தினம்
2016 மார்கழி 10ம் திகதி
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை மண்டபம்
பிரதம அதிதியுரை
குருர் ப்ரம்மா…………………………………
ஒவ்வொரு வருடமும் மார்கழி 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் வடமாகாணத்தில் இவ்வருடம் கௌரவ அனந்தி சசிதரன் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இவ் விழாவில் சிறப்பு அதிதிகளாக வருகை தந்திருக்கும் அருட்தந்தை மங்களராஜா அடிகளார் அவர்களே, அருட்தந்தை செபமாலை அடிகளார் அவர்களே, சட்ட வல்லுனர்களான திரு. குருபரன், திரு. சுகாஸ் அவர்களே, மற்றும் இந்த நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக வருகைதந்திருக்கும் பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

தனிமனித உரிமைகள் என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச மனித உரிமை பிரகடனம் மூலமாக 30 வகைகளுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் யாவருக்குமான சம உரிமை, சட்டத்தின் முன் ஒவ்வொருவருக்கும் சம உரிமை, தான்தோன்றித்தனமான கைது, தடுத்து வைத்தல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு, உயிர் வாழ்வதற்கான உரிமை, தனிமனித சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு நகர்ந்து செல்வதற்கான உரிமை, ஒரு தேசிய இன அங்கத்தினராக ஏற்றுக் கொள்ளப்படும் உரிமை, கருத்துச் சுதந்திரம், அதனை வெளிப்படுத்தும் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கல்வி கற்பதற்கான உரிமை, சொத்துக்களை வைத்திருப்பதற்கான உரிமை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதான ஒரு சட்டமூலமாக அப்பிரகடனம் கொள்ளப்படலாம்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் சாம்பல் மேட்டிலிருந்து, யுத்தங்களுக்கு எதிரான சிந்தனைகளில் இருந்து உதயமாகியதே ஐக்கிய நாடுகள். 1948ம் ஆண்டில் முதன் முதலில் 58 நாடுகளின் உறுப்புரிமையுடன் உருவாக்கப்பட்டதே சர்வதேச மனித உரிமை பிரகடனம். இன்று 193 நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சர்வதேச சட்டங்களை உள்ளடக்கி மனித உரிமைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு மனித உரிமை சாசனமாக அது உருவகித்துள்ளது. உலகளாவிய ரீதியில் இடம்பெறக்கூடிய இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், ஆக்கிரமிப்புக்குற்றங்கள் என அபாயம் மிகுந்த பல குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துவதற்கும் அவ்வாறான செயல்கள் இடம்பெறாது இருப்பதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு சட்டவாக்கமாகவே இதனைப் பார்க்கின்றோம்.

உலகளாவிய ரீதியில் சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை இனங்களால் ஒடுக்கப்படுவதும் அவர்களின் வாழும் உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது கருத்து வேற்றுமைகள் உருவாவதும் அவற்றின் விளைவாக தேவையற்ற சண்டை சச்சரவுகள் உருவாவதும் உலகில் தொன்று தொட்டு அவதானிக்கப்பட்டுள்ளன. ஆனால் அக் கருத்து வேற்றுமைகளை நீக்குவதற்கான அடிப்படைக் கொள்கைகளை மேற்படி சர்வதேச பிரகடனங்கள், ஒப்பந்தங்கள் போன்றன அடையாளங் கண்டுள்ளன. சகலருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று நாட்டின் அரசாங்கங்கள் தீர்மானம் எடுத்தால் பக்கச்சார்பான சட்டங்களை இயற்ற முடியாது போய்விடும். இந்தப் பிரகடனங்களின், ஒப்பந்தங்களின், உடன்பாடுகளின் முக்கியத்துவம் இதிலிருந்து புரிகின்றது.

ஆனால் இலங்கையில் தமிழ் இனத்தின் மனித உரிமைகள் மனிதத்தை ஏற்க மறுக்கும் இனவாத சக்திகளினால் மறுக்கப்பட்ட போது எம்மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டது. சர்வதேச சட்டங்கள் இருந்தும் அவை இங்கு சக்தியற்றதாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை, மொழிப்பயன்பாட்டில் இரண்டாம் தரப்பிரஜைகளாக்கல், கல்வியில் ஓரங்கட்டுதல், அரச நியமனங்களில் பாகுபாடு, எனத் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பக்கச் சார்பான நடவடிக்கைகளுக்கு எதிராக வீறுகொண்டெழுந்த இளைஞர் அணிகளினால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையே ஆயுத கலாச்சாரமாக விரிவடைந்து இந்நாட்டின் பாரிய இனக் கலவரங்களுக்கும் அநியாய உயிரிழப்புக்களுக்கும் சொத்து அழிப்புக்களுக்கும் காரணிகளாக அமைந்தன.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சிங்கள தமிழ் சமூகங்கள் ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்குரிய போராட்டங்களில் ஒற்றுமையாக ஈடுபட்ட போதும் ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறப் போகின்றார்கள் என்று தெரிய வந்த மிகச் சொற்ப காலத்துக்குள்ளேயே தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான வேற்றுமை உணர்வுகள் வளரத் தொடங்கி விட்டன. சிங்களப் பெரும்பான்மை இனத் தலைவர்கள் தமிழர்களை ஒடுக்குவதற்கும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள், வழிபாட்டுத்தலங்கள், வியாபார நிலையங்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றை காலத்துக்குக் காலம் அழித்தொழிக்கவும் தமிழ் மக்களை தொடர்ந்தும் நலிவடைந்த ஒரு இனமாக மாற்றவும் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக ஏற்பட்ட நீண்ட கால யுத்தத்தின் பெறுபேறாக    இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை தற்போது சர்வதேச நாடுகளால் கையாளப்படுகின்ற ஒரு விடயமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் ஐ.நா சபையில் தற்போது அவதானிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எங்கள் பிரச்சினைகள் வல்லரசு நாடுகளின் சொந்த அரசியலுக்கும் ஒரு காரணியாக அமைந்துவிட்டது. எங்கள் பிரச்சனைகளைக் காரணங்காட்டியே வல்லரசு நாடுகளின் பனிப்போர்கள் நடைபெறுகின்றன. தங்களிடையே இருக்கும் சகல அரசியல் முரண்பாடுகளுக்கும் மனித உரிமைகளையே நாடுகள் பல பாவித்து வருகின்றன.

அதே போல் நாங்கள் எங்கள் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக் காட்டினால் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் சிலர் தமது மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தம்மை ஆத்திரமூட்டுவதாக எமது கருத்துக்கள் அமைவதாகவும் கூறுகின்றார்கள். தவறான செய்திகளை உள்வாங்கி கௌரவ அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் வாய்க்கு வந்தபடி கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் கௌரவ அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் எனக்கு மிகவும் அறிமுகமானவர்.

புத்தர் சிலைகளை வடக்கில் அமைக்க இடமளிக்கக் கூடாது என்று எப்போதாவது கூறினீர்களா என்று நேரடியாகவே என்னிடம் கேட்டிருக்கலாம். தவறான தகவல்களை வைத்துத் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் கௌரவ அமைச்சர் அவர்கள். சட்டவிரோதமாக சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் தனியார் காணிகளில் புத்தர் சிலை அமைப்பதையே நாங்கள் கண்டித்தோம். அதை வேறு விதமாகத் திசை திருப்பியுள்ளார் கௌரவ அமைச்சர் அவர்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த சிங்கள கலைச் சொல்லகராதியின் ஆசிரியர் கலாநிதி அகுரடியே நந்தா தேரோ அவர்கள் கூட புத்தர் சிலைகளை பௌத்தர்கள் வாழாத இடங்களில் சட்ட விரோதமாக அமைப்பதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று கூறினார். எனவே போலிக் காரணங்களை வைத்து மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுவதை நாங்கள் யாவரும் தவிர்த்துக் கொள்வோமாக!

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் மற்றும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்ட இன்றைய அரசு தமிழ் மக்கள் பிரச்சனைகளை ஓரளவுக்காவது தீர்த்துவைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது என்று தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். இவர்களால் உருவாக்கப்படுகின்ற அரசியல் திருத்த சட்டமூலங்களில் எமது பிரச்சனைகள் நீதியான முறையில் ஆராயப்படும் என அவர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள். கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த அரசின் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்களுக்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அனுசரணைகளையும் நல்கிவருகின்றார் என எண்ணுகின்றேன். எனினும் புதிய அரசியல் யாப்பு அங்கீகாரந் தொடர்பில் பேசப்படுகின்ற புதிய புதிய விடயங்களும் அமைச்சர் சிலரின் கருத்துக்களும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக் கேள்விக்குறியானதாக மாற்றிவிடுமோ என எண்ணத்தோன்றுகின்றது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ பிரதம் மந்திரி அவர்களினதும் தமிழ் மக்கள் பற்றிய தனிப்பட்ட சிந்தனைகள் வரவேற்புக்குரியன. இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் கரிசனைகளைக் காட்டிவருகின்றார்கள். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும்; இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற நல்ல கொள்கைகளை முன்னெடுக்க முயல்பவர்களாக அவர்கள் எங்களுக்;குக் காட்டி வருகின்றார்கள். ஆனால் வார்த்தைகள் வலியுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது புரியாத புதிராகவே அமைந்திருக்கின்றது.

இந்த அரசு இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பல்வேறு தனியார் நிலங்களையும் அவர்களின் வீடுகளையும் மீள ஒப்படைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் பல விடுவிக்கப்படாதிருக்கின்றன. அறுபத்தேழாயிரம் ஏக்கர் காணிகளில் சுமார் மூவாயிரத்து ஐந்நூறு ஏக்கர்களே விடுவிக்கப்பட்டுள்ளன. மற்றும் மீன்பிடி கேந்திர ஸ்தானங்களை தம்வசமே படையினர் வைத்திருக்கின்றார்கள். புதிய புதிய பௌத்த மதக் கோவில்கள் சட்டத்திற்கு மாறாக வடமாகாணத்தில்  உருவாக்கப்படும் போது அவற்றை நிறுத்துமாறு நாம் கோரிக்கை விடுகின்ற போது எம்மை அடிப்படைவாதிகள் எனக் கூறுவது இவர்களின் நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் எல்லாம் ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன.

எனவே இந்த நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களுந் தாம் விட்ட தவறுகளை உணர்ந்து கொண்டு அனைத்து மக்களுக்குங் கிடைக்க வேண்டிய உரித்துக்களை அவர்களுக்கு வழங்கக் கூடியவாறு இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும். அதற்கு முன்னேற்பாடாக

1.    வடக்கு கிழக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்.
2.    பௌத்த இன மக்கள் எவருமே வாழாத பகுதிகளிலும், இராணுவ முகாம்கள் அற்ற பகுதிகளிலும் இராணுவத்தினரின் உதவியுடன் புதிய பௌத்த கோவில்கள் அமைப்பதை நிறுத்த வேண்டும்.
3.    எதுவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து நீண்ட காலம் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனே கைவாங்கினால் மேற்படி இளைஞர்களை தாமதமின்றி விடுதலை செய்ய வேண்டிவரும்.
4.    போர்க்குற்ற விசாரணை சர்வதேச உள்ளீடல்களுடன் ஆரம்பிக்கப்பட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.    இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகள் மற்றும் யுத்தக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
6.    வீடுகளை இழந்த மக்களுக்கான புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
7.    மீன்பிடி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையங்களை உடனடியாக விடுவித்து மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்.
8.    எமது வளங்களைத் தெற்கில் இருந்து வந்து கவர்ந்து செல்வதை நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு முன்னேற்பாடுகளை உடனே நடைமுறைப்படுத்தினால்த் தான் எம் நாடு மனித உரிமைகள் மீது கரிசனையுள்ள நாடு என்று கணிக்கப்படலாம்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *